Pavalamalli : தெய்வாம்சம் கொண்ட பவளமல்லி.. இந்த திசையில் வளர்த்தால் பணம் கொட்டும்
வாஸ்து சாஸ்திரத்தின்படி பவளமல்லி செடியானது தெய்வ மகிமைகள் பொருந்தியதாக நம்பப்படுகிறது. பவளமல்லி செடி குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Pavalamalli Flower Benefits
பவளமல்லி என்பது பாரிஜாதம் அல்லது நைட் ஜாஸ்மின் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு அழகான மற்றும் தனித்துவமாக பூக்கும் ஒரு செடியாகும். இதன் நறுமணம் மற்றும் மருத்துவ குணங்களுக்காக பெரிதும் மதிக்கப்படுகிறது. இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த செடி, ஆரஞ்சு நிற காம்புகளுடன் வெள்ளை நிற பூக்களால் அடையாளம் காணப்படுகிறது. சூரியன் அஸ்தமம் ஆனவுடன் இந்த பூக்கள் மலர்ந்து விடியற்காலைக்குள் உதிர்ந்து விடும். இது ஒரு வியப்பான பூக்கும் நடைமுறையாகும். இந்த செடியின் பூக்கள் மிகத் தீவிரமான, அதே சமயம் இனிமையான நறுமணத்துடன் விளங்கும். மாலையில் இந்த செடி பூக்கும் பொழுது இதன் நறுமணம் வீட்டை சுற்றிலும் பரவி மனதை மயக்கும்.
பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட பவளமல்லி
பவளமல்லி செடியானது இந்து மதத்தில் ஒரு புனிதமான செடியாக கருதப்படுகிறது. கிருஷ்ணர் மற்றும் லட்சுமிதேவி வழிபாட்டிற்கு இந்த பூக்கள் உகந்ததாக கருதப்படுகிறது. பல்வேறு மத சடங்குகள் மற்றும் வழிபாடுகளில் இந்த பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. பவளமல்லி செடியை வீட்டில் வளர்த்து வந்தால் அந்த வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள் என்பது நம்பிக்கை. பவளமல்லி செடியை எந்த திசையில் நட வேண்டும்? எப்படி நட வேண்டும்? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். வாஸ்து சாஸ்திரத்தின் படி பவளமல்லி செடி இருக்கும் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வதாகவும், அந்த வீட்டில் செல்வத்திற்கு எந்த குறையும் ஏற்படாது என்று நம்பப்படுகிறது. பாற்கடலை கடையும் பொழுது வெளிவந்த 14 ரத்தினங்களில் பவளமல்லி செடி பதினோராவது ரத்தினமாக கூறப்படுகிறது.
பவளமல்லி செடியின் மகிமைகள்
எனவே பவளமல்லி செடியை வீட்டில் வைத்தால் எந்த குறையும் ஏற்படாது. வாஸ்து சாஸ்திரத்தின் படி இந்த செடியானது எதிர்மறை ஆற்றல்களை விலக்கி நேர்மறை ஆற்றல்களை பரப்புகிறது. இந்த செடியில் இருந்து வரும் நறுமணம் மன அழுத்தத்தை நீக்குகிறது. இந்த பூக்கள் எங்கெல்லாம் பூத்து விழுகிறதோ அந்த இடங்களில் மகிழ்ச்சி நிலைக்கும் என்றும், பவளமல்லி செடியை வளர்ப்பவர்கள் வீட்டில் நல்லொழுக்கங்கள் மேலோங்கும் என்றும் கூறப்படுகிறது. பவளமல்லி செடி நடப்பட்ட வீட்டில் உள்ளவர்கள் நோய் நொடிகள் இல்லாத நீண்ட ஆயுளை பெறுவார்கள் என்றும், அவர்களுக்கு பாவங்களில் இருந்தும் விடுதலை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்திரனுடன் சண்டையிட்ட பிறகு கிருஷ்ணர் இந்த செடியைப் பெற்று தனது மனைவி ருக்மணிக்கு பரிசளித்ததாக புராணங்கள் கூறுகிறது.
பவளமல்லி செடியை எந்த திசையில் நட வேண்டும்?
பவளமல்லி செடியை குறிப்பிட்ட திசையில் நட வேண்டியது அவசியம். வீட்டின் கிழக்கு அல்லது வட திசையில் இந்த செடியை நட வேண்டும். அல்லது வீட்டின் மேற்கு அல்லது வடமேற்கு பகுதியில் நடலாம். எக்காரணம் கொண்டும் தெற்கு திசையில் நடக்கூடாது. தெற்கு திசையானது எமனின் திசையாக கருதப்படுகிறது. செடியை வீட்டில் பின்புறத்தில் வளர்ப்பதை விட வீட்டின் முற்றத்தில் நடலாம். இதன் காரணமாக வீட்டிற்குள் செல்வம் வந்து சேரும். முடிந்தால் இந்த செடியை கோயிலிலும் நடலாம். பொதுவாக இந்த பவளமல்லி செடிகளுக்கு பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல்கள் இருப்பதில்லை. இருப்பினும் சிலந்திப் பூச்சிகள் போன்றவை அவ்வப்போது செடியை தாக்கலாம். எனவே அடிப்படை பராமரிப்பு மற்றும் குறைந்தபட்ச கவனிப்பு இருந்தாலே பவளமல்லி செடியை நம்மால் வளர்க்க முடியும்.
பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படும் பவளமல்லி
பவளமல்லி செடியானது பெரிய புதர் போன்றோ அல்லது சிறிய மரமாகவோ வளரும் தன்மை கொண்டது. சுமார் பத்து மீட்டர் உயரம் வரை வளரும். இதன் பூக்கள் ஐந்து முதல் எட்டு இதழ்கள் கொண்ட வெண்மை நிறத்தில் இருக்கும். நடுவில் ஆரஞ்சு நிறத்தில் சிறிய காம்புகள் இருக்கும். பவளமல்லி வளர்வதற்கு சூரிய ஒளி தேவை. ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் இருக்கும்படி இதை நட வேண்டும். நல்ல வளமான மண் இதற்கு ஏற்றது. களிமண்ணை தவிர்க்க வேண்டும். பவளமல்லி தெய்வ குணங்கள் மட்டுமல்லாமல், மருத்துவ குணங்களும் நிறைந்தது. இதன் இலைகள், பூக்கள், விதைகள், பட்டைகள் என பலவும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பு: பவளமல்லி ஆனது தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு ஒரு ஏற்ற செடியாகும். இது ஒரு அற்புதமான மற்றும் ஆச்சரியங்கள் நிறைந்த ஒரு செடி. இதன் அழகிய பூக்களும், நறுமணமும், மருத்துவ குணங்களும், தெய்வ அம்சங்களும் உங்கள் வீட்டிற்கு அழகையும், சிறப்பையும் கொண்டு வரும். வசதி இருப்பவர்கள் உங்கள் தோட்டத்தில் பாரிஜாத மலர்களை நட மறவாதீர்கள்.