- Home
- Astrology
- சனி பகவானை விட மிகவும் மோசமான இரு கிரகங்கள்.! இவர்கள் பார்வை உங்களை படுபாதாளத்தில் தள்ளிவிடும்.!
சனி பகவானை விட மிகவும் மோசமான இரு கிரகங்கள்.! இவர்கள் பார்வை உங்களை படுபாதாளத்தில் தள்ளிவிடும்.!
Which is the Most Dangerous Planet in Astrology in Tamil : சனி பகவானைக் காட்டிலும் கடுமையான விளைவுகளை தரக்கூடிய கிரகங்கள் இருக்கிறது. அந்த கிரகங்கள் யார்? அவர்களால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சனி பகவானை விட ஆபத்தான கிரகங்கள்
ஜோதிட சாஸ்திரத்தின் படி சனி பகவான் மெதுவாக நகரும் கிரகமாகமாவார். அவர் ஒரு ராசிக்கு வரும்பொழுது பலரும் அவரைக் கண்டு அச்சப்படுகின்றனர். அவர் கர்ம காரகன் என்று அழைக்கப்படுகிறார். ஒருவரது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தண்டனையோ அல்லது வெகுமதியோ வழங்குவதில் அவர் பாரபட்சம் பார்ப்பதில்லை. இருப்பினும் சனி பகவானை விடவும் புராண ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் கடுமையான விளைவுகளையும், திசை தெரியாத குழப்பங்களையும், எதிர்பாராத பேரழிவுகளையும் ஏற்படுத்தக்கூடிய கிரகங்கள் உள்ளன. அதில் முக்கியமானது ராகு மற்றும் கேது.
ராகு - பிரம்மாண்ட மாயை
ஜோதிடத்தின்படி, ராகு பகவான் ஒரு நிழல் கிரகமாகும். இவர் எப்போது என்ன செய்வார் என்று கணிக்கவே முடியாது. இவர் மாயை, ஆசை, திடீர் விபத்துக்கள், தேவையற்ற குழப்பங்கள், பிரமைகள் ஆகியவற்றை கொடுத்து ஒருவரை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதில் வல்லவராக உள்ளார். ஜோதிடத்தில் பழமொழி ஒன்று உண்டு. ‘மந்தனைப் போல் ராகு செவ்வாயை போல் கேது’ என்பதாகும். அதாவது சனி தரும் கஷ்டங்களை ராகுவும், செவ்வாய் தரும் பாதிப்புகளை கேதுவும் தருவார்கள் என்பதாகும். சனி பகவான் ஒருவருக்கு தண்டனை கொடுக்கும் பொழுது தப்பிக்க வழியையும் காட்டுவார்.
ராகுவால் ஏற்படும் பாதிப்புகள்
ஆனால் ராகு பகவான் ஒரு மனிதனின் புத்தியை மறைத்து விடுவார். புத்தி தடுமாறினால் மனிதன் தாமாகவே குழியில் விழுவான். இதுதான் ராகுவின் ஆபத்தான அச்சமாகும். ராகு பகவான் ஒருவரை ஆட்கொள்ளும் பொழுது அவர்களுக்கு எது சரி எது? தவறு எது? என்று பிரித்தறியும் அறிவு மழுங்கிப் போகும். ராகு ஒருவருக்கு ராஜயோகத்தை வழங்கினால், அது எப்போது வந்தது என்றும் தெரியாது, எப்போது பறிபோகும் என்பதும் தெரியாது. சட்டவிரோத செயல்கள், போதைப் பழக்கம், தீய சகவாசங்கள் ஆகியவற்றிற்கு ராகு முக்கிய காரணியாகிறார். சனி பகவான் ஒருவரை மெதுவாக வருத்தத்திற்கு உள்ளாக்குவார். ஆனால் ராகு ஒருவரை சத்தமில்லாமல் சிதைத்து விடுவார்.
கேது - ஞானமும், நரகமும்
ராகுவை போலவே கேது பகவானும் அசுப பலன்களை வழங்கும் கிரகமாக அறியப்படுகிறார். கேது ‘ஞான தாரகன்’ என்று அழைக்கப்பட்டாலும் லௌலக வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு அவர் ராகுவை விட கொடூரமானவராக தெரிவார். கேதுவின் வேலை எதையும் வெட்டி எறிவதாகும். உறவுகள், சொத்துக்கள், அந்தஸ்து என நீங்கள் எதை அதிகமாக நேசிக்கிறீர்களோ அதை உங்களிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரித்து விடுவார். கேது ஒருவரது ஜாதகத்தில் அசுப நிலையில் இருந்தால் அந்த நபர் தீர்க்க முடியாத மனநோய்க்கும், தனிமை உணர்வுக்கும் ஆளாக்கப்படுவார். கேதுவால் வரும் நோய்களை மருத்துவர்களால் கூட கண்டுபிடிக்க முடியாது. உடல் ரீதியான வலியை விட மனரீதியான வலியை தருவதில் கேது கில்லாடி ஆவார்.
சனி பகவான் ஏன் மோசமானவர் அல்ல
உண்மையில் சனி பகவானை சனீஸ்வரன் என்று அழைக்கிறோம். அவர் நீதிபதி ஆவார். ஒருவர் செய்த தவறுகளுக்கு அவர் பாடம் புகட்டுகிறார். சோதனைகளுக்கு பிறகு ஒரு மனிதனை பக்குவப்படுத்தி, அவனை வைரமாக மாற்றுகிறார். சனி பகவான் கொடுக்கும் கஷ்டங்கள் உங்கள் முன்னேற்றத்திற்காக இருக்குமே தவிர, உங்களை அழிப்பதற்காக இருக்காது. ஆனால் ராகு மற்றும் கேது கிரகங்களின் செயல்பாடுகள் எதிர்பாராதது மற்றும் வேகமானது. இவர்கள் மதியையும், விதியையும் குழப்புகிறார்கள். மாயை மற்றும் இழப்புகளைத் தரும் நிழல் கிரகங்களாகும். முறையான வழிபாடும், இறை சிந்தனையும் மட்டுமே இவர்கள் இருவரிடமிருந்து உங்களைக் காக்கும்.
சனியை விட அதிக பாதிப்புகள் தரும் ராகு கேது
சனி பகவான் ஒரு ஆசிரியர் போல அடித்துக் கொடுத்தாவது நம்மை சீர்திருத்துவார். ஆனால் ராகு, கேது மாய கண்ணாடி போல எதையெதையோ காட்டி நம்மை திசை திருப்பி, பாதாளத்தில் தள்ளி விடுவார்கள். நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது ஒருவரது ஜாதகத்தில் பாதகமான இடங்களில் அவர்களில் அமரும் பொழுது அவை தரும் பாதிப்புகள் சனி பகவான் தரும் பாதிப்புகளை விட பல மடங்கு அதிகமாகவும், தாங்க முடியாததாகவும் இருக்கும். குறிப்பாக ஒருவருக்கு ராகு திசை அல்லது கேது திசை நடக்கும் பொழுது அவர்கள் அணுபவிக்கும் போராட்டங்கள் சனியின் ஏழரை சனியை விட கடுமையாக இருக்கும் என்பது ஜோதிட ரீதியான நம்பிக்கை.
முக்கிய குறிப்பு
இருப்பினும் எந்த கிரகமும் முழுமையாக கெட்டது கிடையாது. உங்கள் ஜாதகத்தில் அந்தந்த கிரகங்கள் அமர்ந்திருக்கும் இடத்தைப் பொறுத்தே பலன்கள் மாறுபடும். எனவே நீங்கள் முழுமையான பலன்களை அறிந்து கொள்ள உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தை அனுபவமிக்க ஜோதிடரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

