- Home
- Astrology
- Pongal 2026: பொங்கல் வைக்க உகந்த நேரம் மற்றும் வழிபாட்டு முறைகள்.! மறந்தும் இந்த நேரங்களில் பொங்கல் வச்சிடாதீங்க.!
Pongal 2026: பொங்கல் வைக்க உகந்த நேரம் மற்றும் வழிபாட்டு முறைகள்.! மறந்தும் இந்த நேரங்களில் பொங்கல் வச்சிடாதீங்க.!
Pongal 2026 Date and Time: 2026 ஆம் ஆண்டு தை பொங்கல் பண்டிகை ஜனவரி 15 வியாழக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் தை பொங்கல் குறித்தும், பொங்கல் வைக்க உகந்த நேரங்கள் குறித்தும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

சூரிய பெயர்ச்சி 2026
உலகத்தில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் கொண்டாடும் பண்டிகையே பொங்கல் திருவிழா. உழவர்களும், உழவு காளைகளுக்கும், உழவுக்கு உதவியாக இருந்த சூரியனுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. சூரிய பகவான் தனது ராசியை ஒவ்வொருமுறை மாட்டும் பொழுதும் தமிழ் மாதங்கள் பிறக்கிறது. சூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து வெளியேறி மகர ராசியில் பயணிக்கத் தொடங்குவதை தை மாதம் என்கிறோம்.
மகர சங்கராந்தி
சூரிய பகவான் மகர ராசியில் பிரவேசிக்கும் காலமே ‘மகர சங்கராந்தி’ எனப்படுகிறது. மகர சங்கராந்தி ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் மட்டுமல்லாமல் இந்தியாவில் வாழும் பிற மாநிலத்தவர்களும் மகர சங்கராந்தியை சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு பொங்கல் பானை வைக்கவும், சூரிய வழிபாடு செய்யவும் உகந்த நேரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சூரிய பொங்கல்
சூரிய பொங்கல் வைக்கும் வழக்கம் உள்ளவர்கள் காலை 6 மணிக்கு சூரியன் உதயமாவதற்கு முன்பே பொங்கல் வைத்து வழிபடலாம். இது ‘சூரிய பொங்கல்’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கு நல்ல நேரம் பார்க்க வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. சூரிய உதயத்திற்கு முன்பே, பொங்கல் வைக்க விரும்புபவர்கள் காலை 4:30 மணி முதல் 6:00 மணி வரையிலான பிரம்ம முகூர்த்த காலத்தில் வைக்கலாம். இது மிகச் சிறந்த நேரமாகும்.
பொங்கல் வைக்க நல்ல நேரம்
காலை 6:00 மணிக்கு மேல் பொங்கல் வைக்க விரும்புபவர்கள் காலை 7:45 முதல் 8:45 மணி வரை வைக்கலாம். இந்த நேரத்தில் பொங்கல் வைக்க முடியாதவர்கள் காலை 10:35 மணி முதல் பகல் 01:00 மணி வரை வைக்கலாம். நீண்ட நேரம் தேவைப்படுபவர்கள் அல்லது மெதுவாக தொடங்குபவர்கள் பகல் 10:30 மணிக்கு மேல் பொங்கல் வைக்கத் தொடங்கலாம். காலை 6:00 மணி முதல் 7:30 வரை எமகண்டம் இருப்பதால் இந்த நேரத்தில் பொங்கல் பானை வைப்பதை தவிர்க்க வேண்டும்.
பொங்கல் தினம் எப்போது?
அதேபோல் ராகு காலம் இருக்கும் மதியம் 1:30 மணி முதல் 03:00 மணி வரை பொங்கல் வைக்க கூடாது. சூரிய பகவான் ஜனவரி 14, 2026 அன்று மதியம் 3:30 மணிக்கு மகர ராசியில் பிரவேசிக்கிறார். இருப்பினும் தமிழ் முறைப்படி சூரிய உதயத்திற்கு பிறகு வரும் ஜனவரி 15ஆம் தேதியே தை முதல் நாளாகவும் பொங்கல் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது. சிலருக்கு பொங்கல் ஜனவரி 14 ஆ அல்லது ஜனவரி 15 ஆ என்ற குழப்பம் இருக்கலாம். ஆனால் சூரிய உதயத்திற்கு பின் வரும் நாளையே கணக்கில் கொள்ள வேண்டும் என்கிற அடிப்படையில் ஜனவரி 15 ஆம் தேதியே பொங்கல் நாள் கொண்டாடப்பட வேண்டும்.
படையிலிட உகந்த நேரம்
ஜனவரி 16, 2026 வெள்ளிக்கிழமை மாட்டு பொங்கல் ஆகவும், ஜனவரி 17 2026 சனிக்கிழமை காணும் பொங்கல் ஆகவும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு காலை சூரிய உதயத்தின் பொழுது 6:15 மணி முதல் 6:45 மணிக்குள் பொங்கல் பானையில் பால் பொங்குவது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. மாட்டுப் பொங்கல் தினத்தில் படையிலிடும் பழக்கம் இருப்பவர்கள் காலை 9:10 மணி முதல் 10:20 வரை படையல் போடலாம் அல்லது 12:00 மணி முதல் 1:30 மணி வரை போடலாம். மாலையில் படையல் போடும் பழக்கம் இருப்பவர்கள் ஆறு மணிக்கு மேல் படையல் போடலாம். மாலையில் இடும் படையலுக்கு நேர கணக்கு கிடையாது.
இறைவன் அருளைப் பெறுங்கள்.!
இந்தப் பொங்கல் தினத்தில் சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், தயிர் சாதம், மஞ்சள், இஞ்சி, கரும்பு, காய்கறிகள், சுண்டல், வடை ஆகியவற்றை படைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுங்கள். இந்த பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனுத் கொண்டாடி இறைவன் அருளைப் பெறுங்கள். வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

