- Home
- Astrology
- Nov 2025 Magara Rasi Palangal: மகர ராசி நேயர்களே.! இந்த மாதம் சூரிய பகவானால் அம்பானி ஆகப் போறீங்க.!
Nov 2025 Magara Rasi Palangal: மகர ராசி நேயர்களே.! இந்த மாதம் சூரிய பகவானால் அம்பானி ஆகப் போறீங்க.!
This Month Rasi Palan: நவம்பர் 2025 மகர ராசிக்கான பொதுவான பலன்கள், கிரக நிலைகள், தொழில் மற்றும் வேலை, நிதி நிலைமை, ஆரோக்கியம், பரிகாரங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

நவம்பர் மாத கிரக நிலைகள்:
சூரியன்: மாதத்தின் ஆரம்பத்தில் உங்கள் பத்தாவது வீடான தொழில் மற்றும் கர்ம ஸ்தானத்தில் இருக்கும் சூரியன், நவம்பர் 16-க்குப் பிறகு 11-வது வீடான லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். இந்த இரு நிலைகளும் உங்களுக்கு சாதகமான முடிவுகளைத் தரும்.
செவ்வாய்: இந்த மாதம் முழுவதும் செவ்வாய் பகவான் லாப வீடான 11வது வீட்டில் சஞ்சரிப்பதால் நல்ல அனுகூலமும், லாபமும், அதிர்ஷ்டமும் கிடைக்கும்.
புதன்: நவம்பர் 23 வரை புதன் பகவான் லாப வீட்டில் இருந்து, அதன் பிறகு தொழில் வீடான பத்தாம் வீட்டிற்கு மாறுவார். இதன் காரணமாக தொழில் மற்றும் நிதி நிலைமை மேம்படும்.
சனி: உங்கள் ராசிநாதன் சனிபகவான் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பதால் உங்கள் உழைப்புக்குரிய பலன்களை வழங்குவார். இருப்பினும் நிதானம், பொறுமை, ஒழுக்கம் தேவை.
குரு: குரு பகவான் நான்காம் வீட்டில் சஞ்சரிப்பதால், குடும்ப உறவுகள், வீட்டு சூழ்நிலை, சுகம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
பொதுவான பலன்கள்:
மகர ராசிக்காரர்களுக்கு நவம்பர் 2025 சாதகமான பலன்களை அளிக்கும் மாதமாக இருக்கும். உங்கள் தொழிலில் சொந்த அடையாளத்தை உருவாக்கி வெற்றியைப் பெறுவீர்கள். முடிவெடுப்பதில் இருந்த சிக்கல்கள் தீரும். குழப்பமான முடிவுகளில் இருந்து விடுபட்டு, துணிச்சலான முடிவுகளை எடுத்து வெற்றியை நிலைநாட்டுவீர்கள்.
உங்கள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. மாதத்தின் இரண்டாம் பாதி சிறந்த பலன்களைத் தரக்கூடியதாக இருக்கும்.
தொழில் மற்றும் வேலை:
தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல இடத்தில் பணி கிடைக்கும். விடாமுயற்சியுடன் உழைத்து அதற்கான பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளில் அலட்சியம் காட்டக்கூடாது.
உயர் அதிகாரிகள் சக ஊழியர்களுடன் இணக்கமாக செல்வது நன்மைகளைத் தரும். மருந்து, இரசாயனம் போன்ற தொழில்களில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலில் இருந்த போட்டி குறையும். உறுதியான முயற்சிகளால் உங்கள் இலக்குகளை அடைவீர்கள்.
கல்வி மற்றும் ஆரோக்கியம்:
கல்வியில் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். ஆராய்ச்சி அல்லது உயர்கல்வியில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான மாதமாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
அதிக வேலைப்பளுவால் மன அழுத்தம், தூக்கமின்மை ஏற்படலாம். எனவே உடல் கொடுக்கும் சில சமிக்ஞைகளை அலட்சியம் செய்ய வேண்டாம். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை சமநிலைப்படுத்த சீரான உணவு மற்றும் உடற்பயிற்சி அவசியம்.
குடும்ப உறவுகள்:
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மங்களகரமான கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியைத் தரும். திருமண வாழ்வு இனிமையாக இருக்கும். வரன் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு திருமண யோகம் கைகூடும்.
குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிடுவது மகிழ்ச்சியை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் தைரியம் உங்களுக்கு துணிவைக் கொடுக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நிதானத்துடன் பேசுவது கருத்து வேறுபாடுகள் வராமல் தடுக்க உதவும்.
பரிகாரங்கள்:
மகர ராசியின் அதிபதியாக விளங்கும் சனி பகவானை வணங்குவது நல்லது. சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயத்தில் எள் தீபம் ஏற்றி வழிபடுவது அல்லது சனி மந்திரத்தை உச்சரிப்பது நிதானத்தையும், அமைதியையும் தரும்.
சனியால் ஏற்படும் பாதிப்பை குறைக்க ஆஞ்சநேயரை வழிபடலாம். இதர கிரக நிலைகளின் அனுகூலத்திற்காக முருகப் பெருமானை வழிபடுவது நல்லது. வறியவர்களுக்கு உதவுவது, தானம் செய்வது நன்மையை அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)