- Home
- Astrology
- கேது பெயர்ச்சியால் இந்த 3 ராசிகளுக்கு கெட்ட நேரம் ஆரம்பம்.. தப்பிக்க எளிய பரிகாரங்கள்!
கேது பெயர்ச்சியால் இந்த 3 ராசிகளுக்கு கெட்ட நேரம் ஆரம்பம்.. தப்பிக்க எளிய பரிகாரங்கள்!
Ketu Peyarchi 2026: கேது பெயர்ச்சியால் மிதுனம், மீனம், துலாம் ராசிகளுக்குச் சவால்கள் கூடும். நிதி இழப்பு மற்றும் மன அழுத்தம் நீங்க விநாயகர், குரு மற்றும் துர்கை வழிபாட்டுடன் கூடிய எளிய பரிகாரங்களை பார்ப்போம்.

Ketu Peyarchi 2026
ஜோதிட சாஸ்திரத்தில் நிழல் கிரகமாக கருதப்படும் கேது பகவான், குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசியை மாற்றுகிறார். சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த கடக ராசிக்கு கேது பிரவேசிக்கும் இந்த நிகழ்வு, அனைத்து ராசிகளிலும் தனது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.
இந்தக் கிரக மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு சவால்களையும், பின்னடைவுகளையும் தரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மிதுனம், மீனம் மற்றும் துலாம் ஆகிய மூன்று ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த செய்தியில் இந்த மூன்று ராசிகளுக்கான பலன்கள் மற்றும் அதற்கான எளிய பரிகாரங்களை விரிவாக பார்க்கலாம்.
1. மிதுன ராசி
மிதுன ராசிக்காரர்களுக்கு கேதுவின் இந்த ராசி மாற்றம் சவால்கள் நிறைந்ததாக அமையலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு குறைவாக இருக்கலாம். புதிய பொறுப்புகள் உங்களை அதிக பணிச்சுமைக்கு ஆளாக்கி, மன அழுத்தம் மற்றும் சோர்வை உருவாக்கக்கூடும். எதிர்பாராத செலவுகள் காரணமாகச் சேமிப்புக் கரைய வாய்ப்புள்ளது.
சிலருக்குக் கடன் வாங்கும் சூழலும் ஏற்படலாம். எனவே நிதி மேலாண்மையில் கவனம் தேவை. தனிப்பட்ட மற்றும் தொழில்முறை உறவுகளில் தவறான புரிதல்கள் எழலாம். பொறுமையும் சரியான உரையாடலும் மட்டுமே இச்சிக்கல்களை தீர்க்கும்.
பரிகாரம்: ஏழைகளுக்கு உங்களால் முடிந்த இயன்ற உதவிகளை செய்வது கேதுவின் தீய பலன்களை குறைக்கும். விநாயகப் பெருமானை வழிபட்டு வருவது மன அமைதியையும், தடைகளைத் தாண்டும் சக்தியையும் தரும்.
2. மீன ராசி
மீன ராசிக்காரர்களுக்கு இந்தக் காலக்கட்டம் சோதனைகள் நிறைந்ததாக இருக்கக்கூடும். உங்கள் பேச்சில் ஏற்படும் சில கடுமை மற்றவர்களுடன் மனஸ்தாபங்களை உண்டாக்கலாம். பேசும்போது வார்த்தைகளில் கூடுதல் கவனம் தேவை. கடின உழைப்புக்கான முழு பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.
வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை நிலவக்கூடும் என்பதால் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். தேவையற்ற அலைச்சல்களும், இலக்குகளை அடைவதில் தற்காலிகத் தடைகளும் மன உளைச்சலைத் தரலாம்.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி அல்லது குரு பகவானை வழிபடுவது நன்மை பயக்கும். ஏழை எளிய மாணவர்களுக்குக் கல்விப் பொருட்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யலாம்.
3. துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்தக் கிரகப் பெயர்ச்சி சில துரதிர்ஷ்டமான சூழ்நிலைகளை உருவாக்கலாம் என்பதால் எச்சரிக்கை அவசியம். நிதி மற்றும் முதலீடு தொடர்பான விவகாரங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை. பெரிய அளவிலான பண முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீடிக்க வாய்ப்புள்ளது.
உறவில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. துணையின் உடல்நிலையில் சிறு தொய்வு ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறுசிறு மனக்கசப்புகள் உருவாகலாம். மன அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க யோகா அல்லது தியானம் மேற்கொள்ளலாம்.
பரிகாரம்: துர்கை அம்மனை வழிபடுவது கேதுவினால் ஏற்படும் எதிர்மறை ஆற்றல்களைக் கட்டுப்படுத்த உதவும். நாய்களுக்கு உணவு அளிப்பது கேது தோஷத்தைப் போக்கச் சிறந்த பரிகாரமாகக் கருதப்படுகிறது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் ஜோதிட நம்பிக்கைகள் மற்றும் பாரம்பரிய கணிப்புகளின் அடிப்படையில் மட்டுமே எழுதப்பட்டவை. இதன் துல்லியத்திற்குத் தகுந்த ஜோதிட நிபுணர்களின் வழிகாட்டுதலை பெறுவது சிறந்தது.

