- Home
- Astrology
- Astrology: கடக ராசியில் சந்திக்கும் குரு சந்திரன்.! கஜகேசரி ராஜயோகத்தால் 6 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுது.!
Astrology: கடக ராசியில் சந்திக்கும் குரு சந்திரன்.! கஜகேசரி ராஜயோகத்தால் 6 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுது.!
Gajakesari rajyog 2025: நவம்பர் 10, 2025 அன்று குரு பகவான் மற்றும் சந்திர பகவான் இருவரும் இணைந்து கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்க இருக்கின்றனர். அதனால் பலன்பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

குரு சந்திரன் சேர்க்கை 2025
ஜோதிடத்தின்படி நவம்பர் 10, 2025 ஆம் தேதி மங்களகரமான மற்றும் சக்தி வாய்ந்த நாளாக அமைகிறது. ஏனெனில் குரு பகவான் மற்றும் சந்திர பகவான் இரண்டு முக்கிய கிரகங்களின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது.
கஜம் என்பது யானையை குறிக்கும் சொல்லாகும். இது வலிமை, செல்வம், ராஜ மரியாதை மற்றும் கம்பீரத்தை குறிக்கும். கேசரி என்றால் சிங்கமாகும். இது தைரியம், வெற்றி, தலைமைப் பண்பு மற்றும் அச்சமற்ற தன்மையைக் குறிக்கும். இந்த ராஜயோகம் உருவாவது சில ராசிக்காரர்களுக்கு யானையைப் போன்ற வலிமையையும், சிங்கத்தைப் போன்ற ஆற்றலையும் வழங்கும்.
கஜகேசரி ராஜயோகம் எப்போது உருவாகிறது?
நவம்பர் 10, 2025 குரு பகவான் தனது உச்ச ராசியான கடகத்தில் வக்ரமடைந்து பயணிக்கிறார். இரண்டரை நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றும் சந்திர பகவானும் கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த இரு சுப கிரகங்களும் இணைந்து கடக ராசியில் சக்தி வாய்ந்த கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். இந்த யோகம் செல்வ வளம், சமூகத்தில் உயர்வு, புகழ், நல்ல அறிவு, செல்வாக்கு, ஆன்மீக பலன் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அளிக்கும் யோகமாக கருதப்படுகிறது. இந்த ராஜயோகத்தால் பலன் பெறும் ராசிகள் குறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம்.
1.கடகம்
கடக ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் இந்த யோகம் உருவாகிறது. உங்கள் ராசியிலேயே இந்த யோகம் உருவாவதால் கடக ராசிக்காரர்களுக்கு பொற்காலத்தின் தொடக்கமாக இருக்கும். உங்கள் ஆளுமைத் திறன், தன்னம்பிக்கை, அறிவு ஆகியவை மேம்படும். சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து உயரும்.
நிதி நிலைமை மற்றும் பொருளாதாரம் வலுப்பெறும். புதிய வருமான வழிகள் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. திருமணம், குழந்தை பாக்கியம், வளைகாப்பு ஆகியவை நடைபெறலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் கைகூடும். நாள்பட்ட நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
2.மேஷம்
மேஷ ராசியின் நான்காம் வீட்டில் இந்த ராஜயோகம் உருவாகிறது. நான்காம் வீடு சுக ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே மேஷ ராசிக்காரர்கள் சுகபோகங்கள் மற்றும் ஆடம்பரங்களை அனுபவிப்பீர்கள். சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு.
மூதாதையர் சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து சொத்துக்கள் வாரிசுகளுக்கு கிடைக்கலாம். வேலையில் இருந்த தடைகள் நீங்கி, ஆற்றலுடனும் நம்பிக்கையுடனும் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை ஈட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
3.மிதுனம்
மிதுன ராசியின் இரண்டாம் வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இந்த இரண்டாம் வீடு தன ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்த காலகட்டத்தில் எதிர்பாராத பண வரவு மற்றும் நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். பழைய கடன்களை அடைக்கும் வாய்ப்புகள் கிடைக்கலாம்.
எதிர்பாராத பணவரவால் பணத்தை சேமிக்கும் திறன் அதிகரிக்கும். உங்கள் பேச்சு இனிமையானதாக மாறும். இதனால் தொழிலில் மற்றும் தனிப்பட்ட உறவுகளில் வெற்றியைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப நிகழ்வுகள் தொடர்பாக செலவுகள் ஏற்படும்.
4.சிம்மம்
சிம்ம ராசிக்கு இந்த ராஜயோகம் பன்னிரண்டாவது வீடான விரய ஸ்தானத்தில் உருவாகிறது. 12-வது வீட்டில் யோகம் உருவாவது செலவுகளை குறித்தாலும் சாதகமான மாற்றங்களை கொண்டு வரும். இந்த செலவுகள் சுப செலவுகளாக அமையும். வெளிநாடு பயணங்கள், வேலைக்காக வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளுக்கு பலன்கள் கிடைக்கும்.
ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நற்செயல்களில் கவனம் செலுத்தி பிறரின் கவனத்தை ஈர்ப்பீர்கள். வாழ்க்கையில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். நீதிமன்றங்களில் வழக்கு தொடர்பான விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
5.துலாம்
துலாம் ராசிக்காரர்களின் தொழில் ஸ்தானமான 10-ஆம் இடத்தில் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதன் காரணமாக துலாம் ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக பல நன்மைகளைப் பெறுவீர்கள். பணி செய்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சமூகம் மற்றும் பணியிடத்தில் உங்கள் திறமைகளுக்கும், கடின உழைப்புக்கும் ஏற்ற அங்கீகாரமும் பலன்களும் கிடைக்கும். வியாபாரம் செய்து வருபவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். கூட்டாளிகளின் ஆதரவு பெருகும். எழுத்து, ஊடகம் போன்ற துறையில் இருப்பவர்கள் அதிக நன்மைகளைப் பெறுவீர்கள்.
6.தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. எட்டாம் வீடு என்பது மறைமுகமான பலன்களை கொடுக்கும் வீடாகும். எனவே பரம்பரை சொத்துக்கள் அல்லது திடீர் நிதி ஆதாயம் மூலம் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். ஆராய்ச்சி, மருத்துவம் அல்லது அறிவு சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும்.
தொழில் அல்லது பிறவகை கடன்களுக்காக விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு பண உதவி கிடைக்கும். நேர்காணல் முடித்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துதல் அல்லது புதிய தொழில் தொடங்குவதில் வெற்றிகளைப் பெறுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)