குருவின் அதிசார பெயர்ச்சி: மேஷம் முதல் துலாம் வரை.. 4 ராசிகளுக்கு இனி பொற்காலம்!
Guru Adhisara Peyerchi 2026: குரு பகவான் கடகத்தில் இருந்து சிம்ம ராசிக்கு அதிசாரமாக மாறி, மகம் நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார். இதனால் மேஷம், ரிஷபம், சிம்மம், துலாம் ஆகிய 4 ராசியினருக்கு பெரும் யோகமும் அதிர்ஷ்டமும் கிடைக்க உள்ளது.

குருவின் அதிசார பெயர்ச்சி 2026
ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களின் 'சுப கிரகம்' என்று போற்றப்படுபவர் குரு பகவான். தேவர்களின் குருவான இவர், பொதுவாக ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர ஓராண்டு காலம் எடுத்துக்கொள்வார். ஆனால், சில காலங்களில் வழக்கத்திற்கு மாறான வேகத்தில் 'அதிசார' நிலையில் பயணிப்பது உண்டு. அவ்வாறு அதிசாரமாக இயங்கும்போது, ஒரே ஆண்டில் இரண்டு முறை ராசி மாறும் நிகழ்வுகளும் நடக்கும்.
அந்த வகையில், தற்போது கடக ராசியில் சஞ்சரித்து வரும் குரு பகவான், அக்டோபர் 31 அன்று அதிசார இயக்கத்தின் மூலம் சிம்ம ராசிக்குச் செல்கிறார். அதோடு, பிதாமக நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் பிரவேசிக்க உள்ளார். இந்த நட்சத்திரப் பெயர்ச்சியானது வரும் 2027 ஜனவரி 25 வரை நீடிக்கும். குருவின் இந்த மக நட்சத்திரப் பெயர்ச்சியால் யோக பலன்களையும், அதிர்ஷ்டத்தையும் பெறப்போகும் 4 முக்கிய ராசிகளைப் பற்றி பார்ப்போம்.
1. மேஷ ராசி
மேஷ ராசியினருக்கு குருவின் இந்த நட்சத்திர மாற்றம் மிகுந்த நன்மைகளைத் தரும். நீண்ட நாட்களாக வராமல் நின்ற நிலுவைத் தொகைகள் கைக்கு வந்து சேரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகளும், ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகளைக் கேட்பீர்கள்.
2. ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்களின் வாழ்வில் நேர்மறையான திருப்பங்களை குரு பகவான் ஏற்படுத்தவுள்ளார். குடும்பத்தில் இருந்து வந்த நீண்ட கால மனஸ்தாபங்கள் விலகும். தாயாரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாயாருடனான பிணைப்பு அதிகரிக்கும்.
புதிய வீடு, நிலம் அல்லது வாகனம் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இது மிகச் சரியான காலம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், முன்னேற்றமும் கிடைக்கும். உடல் உபாதைகள் குறையும் என்றாலும், திடீர் மாற்றங்களில் சற்று நிதானம் தேவை.
3. சிம்ம ராசி
சிம்ம ராசியில் குரு பகவான் பிரவேசிப்பதோடு மக நட்சத்திரத்திலும் பயணிப்பதால், இவர்களுக்கு இரட்டிப்பு நன்மைகள் கிடைக்கவுள்ளன. கேதுவின் தாக்கத்தால் இதுவரை சந்தித்து வந்த தடைகளும், குழப்பங்களும் இனி விலகும்.
கலை, ஊடகம், அரசியல் மற்றும் சமூக சேவைத் துறையில் உள்ளவர்களுக்கு புதிய உயரங்களை எட்டும் வாய்ப்பு அமையும். பணியிடத்தில் உங்களின் திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். மாணவர்களுக்குக் கல்வியில் கவனமும் முன்னேற்றமும் கூடும். ஆரோக்கியத்தில் மட்டும் சிறு கவனமும் பராமரிப்பும் அவசியம்.
4. துலாம் ராசி
துலாம் ராசியினருக்கு நிதி விஷயங்களில் இந்த பெயர்ச்சி மிகப்பெரிய ஏற்றத்தை தரும். எதிர்பாராத பணவரவு மற்றும் முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் மற்றும் திட்டங்கள் நிறைவேறும்.
பணிபுரியும் இடத்தில் நிலவி வந்த தடைகள் நீங்கி, ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு நல்ல முதலீட்டாளர்கள் கிடைப்பார்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். வரன் தேடுபவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.





