- Home
- விவசாயம்
- செப்டம்பர் 1 முதல்... விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்த குஷியான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
செப்டம்பர் 1 முதல்... விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்த குஷியான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
தமிழ்நாடு அரசு 2024-25 நெல் கொள்முதல் பருவத்தில் 46.5 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்துள்ளது. 2025-26 பருவத்திற்கு சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.156/- ஆகவும், பொதுரகத்திற்கு ரூ.131/- ஆகவும் ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விவசாயம்
விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் நெல் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரசு பொறுப்பேற்ற ஆண்டில் 2021-22 நெல் கொள்முதல் பருவத்தில் 43.27 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2024-25 நெல் கொள்முதல் பருவத்தில் தமிழ்நாட்டின் வரலாற்றில் நம் முதல்வர் அவர்களின் பொற்கால ஆட்சியில் என்றுமில்லாத அளவிற்கு இன்று (13.08.2025) வரை 46.5 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நெல் உற்பத்தி
நம் தாயுமானவர் முதல்வர் அவர்கள் 2021-22 சந்தைப் பருவத்திற்கு சன்னரகம் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.100/- ஆகவும் பொதுரகத்திற்கு ரூ.75/- ஆகவும் உயர்த்தி வழங்க ஆணையிட்டார்கள். மாநில அரசின் ஊக்கத்தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது சன்னரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.130/- ஆகவும் பொதுரகத்திற்கு ரூ.105/- ஆகவும் வழங்கப்பட்டு வருகிறது.
கழக ஆட்சி பொறுப்பேற்ற போது சன்னரகம் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.1958/- ஆகவும் பொதுரகம் ரூ.1918/- ஆகவும் இருந்தது. வருகின்ற 2025-26 பருவத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகையாக குவிண்டால் ஒன்றிற்குச் சன்னரகத்திற்கு ரூ.156/- ஆகவும், பொதுரகத்திற்கும் ரூ.131/- ஆகவும் உயர்த்தி அறிவித்துள்ளார். தற்போது 2025-26 பருவத்திற்கு சன்னரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2545/- ஆகவும், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2500/- ஆகவும் வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை
நம் முதல்வர் அவர்களின் 51 மாத கால ஆட்சியில் இதுவரை மொத்தம் 1.83 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு 40,440.21 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகையாக மட்டும் ரூ.1,816.46 கோடி வழங்கப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி நெல்கொள்முதல் பருவம் அக்டோபர் முதல் நாள் தான் தொடங்கும். செப்டம்பரில் அறுவடையாகும் நெல்லை மழைக் காலத்தில் அக்டோபர் மாதத்தில் வாங்கும் நிலை தான் இருந்தது.
இதை மாற்றி செப்டம்பர் மாதமே அக்டோபரில் தொடங்கும் பருவ விலையில் நெல் கொள்முதல் செய்திட நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இந்தியப் பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதி, அனுமதி பெற்று 2022-2023 ஆண்டு முதல் செப்டம்பரிலேயே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் செப்டம்பர் முதல் நாளிலிருந்து கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு அனுமதித்துள்ளது.
செப்டம்பர் 1 முதல் நெல் கொள்முதல்
இந்த ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி ரூபாய் 827 கோடியே 78 இலட்சம் மதிப்பீட்டில் 7 இலட்சத்து 33 ஆயிரத்து 350 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய 57 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் கட்டுவதற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் வருங்காலங்களில் திறந்த வெளியில் நெல்லைச் சேமிக்க வேண்டிய தேவை எழாது.
இந்த ஆண்டு நெல்வரத்து அதிகமாக வரலாறு காணாத வகையிலிருந்தாலும் எதிர்பாராது அடிக்கடி மழை பெய்தபோதும் நெல்மணிகள் மழையில் நனையாமல் காப்பாற்றப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல்வரத்து அதிகமாக இருந்ததால் சில இடங்களில் தேக்கம் ஏற்பட்டாலும் நெல்லை உடனுக்குடன் அரிசி அரவை ஆலைக்கு அனுப்பப்பட்டு என்றுமில்லாத அளவிற்கு விரைந்து நெல் அரைக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.