மதன் ஓபி மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
யூ-டியூப்பில் ஆன்லைன் கேம் விளையாட கற்று கொடுப்பதாக கூறி யூ-டியூப்பர் ஒருவர் சிறுவர், சிறுமிகளிடம் மிகவும் ஆபாசமாக பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட்ட ஒரு ஆன்லைன் விளையாட்டு குறித்து விளக்க யூ-டியூப் சேனல் ஒன்றை மதன் என்பவர் தொடங்கினார். மதன், டாக்ஸிக் மதன் 18 பிளஸ் ஆகிய யூடியூப் சேனல்களில் விளையாட்டின் டிப்ஸ், டிரிக்ஸ் சொல்லிக் கொடுப்பதைவிட ஆபாசமான உரையாடல்கள் அதிகளவில் நடந்திருக்கின்றன. அதை சில சிறுவர்கள், சிறுமிகள் ஆர்வமாக ரசித்திருக்கின்றனர். சமீபத்தில் கெட்ட வார்த்தை பேசாதீர்கள் எனக்கூறிய பெண் ஒருவரை கமெண்டிற்கு, அவரை காதில் கேட்க முடியாத படி ஆபாசமான வார்த்தைகளால் மதன் பேசிய வீடியோ வைரலானது.

இதனையடுத்து யூ-டியூப்பர் மதன் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் உதவி என்ற பெயரில் நிதி வசூலில் இறங்கி மோசடி செய்ததாகவும் மதன் மீது புகார்கள் எழுந்துள்ளது. மாநிலக் குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. புளியந்தோப்பில் உள்ள சைபர் க்ரைம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு ஆஜராகும் படி காவல்துறை உத்தரவிட்ட நிலையில், மதன் தலைமறைவானார்.

எனவே தலைமறைவாக உள்ள மதனை தேட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதனின் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை முடக்குவதற்கு காவல்துறையினர் அந்த நிறுவனத்துக்குக் கடிதம் எழுதியுள்ளனர். இந்நிலையில் மதன் ஓபி மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் விரைந்த தனிப்படை போலீசார் மதன் அங்கு பதுங்கியிருக்கிறாரா என மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
