விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இருக்கும் புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலுசாமி. இவரது மகன் கோடீஸ்வரன். பாலுசாமி கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கோடிஸ்வரன் அந்த பகுதியில் பிளம்பிங் தொழில் பார்த்து வந்துள்ளார்.

அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்திருக்கிறது. தினமும் வேலை முடிந்து நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் இரவு நண்பர்களுடன் சேர்ந்து கோடீஸ்வரன் மது அருந்தி இருக்கிறார். அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த நண்பர்கள் சிலர் கோடீஸ்வரனை சரமாரியாக தாக்கியதோடு அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்திருக்கின்றனர். பின்னர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.

அதிகாலை நேரத்தில் சிவகாசி பகுதியில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தினர். நன்றாக மதுபோதையில் இருந்த அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். அவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்தபோது கோடிஸ்வரனை கொலை செய்து விட்டதாக மதுபோதையில் கூறியுள்ளனர். இதையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு கோடீஸ்வரன் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நடந்த கொலை சம்பவமா அல்லது திட்டமிட்டு நடந்த கொலையா என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.