மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர் ராஜு. முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி ஆதிலட்சுமி. இந்த தம்பதியினருக்கு பார்த்திபன் என்கிற மகன் இருக்கிறார். இவருக்கு பேஸ்புக் மூலமாக நண்பர்களாக சிலர் பழகி உள்ளனர். பலநாட்களாக பார்த்திபனிடம் பேசி வந்த அவர்கள், அவரை நேரில் சந்திக்க அளித்திருக்கின்றனர்.

இதையடுத்து கடந்த சனிக்கிழமை இரவு அவர்களை சந்திப்பதற்காக பார்த்திபன் தனது இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். இரவு வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை பல இடங்களில் பெற்றோர் தேடியிருக்கின்றனர். பார்த்திபனின் நண்பர்களிடம் விசாரித்ததில் அவர்களும் தெரியவில்லை என்று கூறியுள்ளனர். இதையடுத்து இரவு 12 மணியளவில் பார்த்திபனின் தந்தைக்கு தொலைபேசியில் சிலர் பேசியுள்ளனர்.

பார்த்திபனை கை, கால்கள் கட்டி அவர்கள் கடத்தி வைத்திருப்பதாக கூறிய அந்த மர்ம நபர்கள், 20 லட்ச ரூபாய் கொடுத்தால் தான் அவரை விடுவிப்போம் என்றும் மிரட்டியிருக்கின்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பார்த்திபனின் பெற்றோர், காவல்துறையில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் காவலர்கள் விசாரணையில் ஈடுபட்டனர்.

பார்த்திபனின் பெற்றோரிடம் மர்ம நபர்கள் பேசிய தொலைபேசி நம்பரை ஆய்வு செய்தனர். அது அவரது வீட்டின் அருகே இருக்கும் இடத்தில் இருந்து வந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். இதையடுத்து பார்த்திபன் வீட்டின் சுற்றுவட்டாரத்தில் காவலர்கள் தேடுதல் வேட்டை நடத்தி, மிரட்டல் விடுத்த நபரை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் பார்த்திபன் கயத்தாறு அருகே மர்ம கும்பலால் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

போனில் பேசிய நபரை வைத்தே கயத்தாறில் இருப்பவர்களிடம் காவல்துறையினர் பேச வைத்தனர். பார்த்திபனின் பெற்றோரிடம் பணத்தை பெற்று விட்டதாகவும், அதனால் அவரை விடுவிக்குமாறும் கூற வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து பார்த்திபனை அவர்கள் விடுவித்துள்ளனர். பேருந்து மூலம் அவர் வீடு வந்து சேர்ந்திருக்கிறார்.

இந்த கடத்தல் சம்பவத்தில் 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் மூன்று பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்து பார்த்திபன் கூறும் போது, தன்னை போல யாரும் பேஸ்புக் மற்றும் ஆன்லைன் மூலமாக பழகியவர்களை சந்திக்கச்சென்று ஆபத்தில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.