கோவை மாவட்டம் சிங்காநல்லுர் அருகே இருக்கிறது விவேகானந்தா வீதி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ரூபன். கோவை பகுதியில் வீடுகள் கட்டி விற்கும் தொழில் பார்த்து வருகிறார். இவர் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). ரூபனுக்கும் ரேவதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நெருங்கி பழகிய இருவரும் நாளடைவில் காதலிக்க தொடங்கியுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் ரூபனின் பழக்க வழக்கங்கள் சரியில்லாமல் போகவே அவருடன் பேசுவதை ரேவதி குறைத்துள்ளார். பின் அவரிடம் இருந்து விலகி காதலிப்பதையும் கைவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரூபன் ரேவதியை பழிவாங்க முடிவெடுத்தார். அதன்படி காதலிக்கும் போது இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சென்றுள்ளனர். அப்போது இருவரும் ஒன்றாக இணைந்து புகைப்படங்கள் எடுத்துள்ளனர். அதை சமூக வலைத்தளங்களிலும் இணையத்திலும் பரவ விட போவதாக ரேவதியை மிரட்டி இருக்கிறார்.

மேலும் ரேவதியின் சகோதரிக்கு ஆபாச படங்களையும் அனுப்பி இருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் புகாரின் அடிப்படையில் ரூபனை அழைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் ஆபாச படங்களை அவர் அனுப்பியது உறுதியானது. இதையடுத்து ரூபனை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். அவர் மீது இருபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read: 'கலெக்டர்ல இருந்து எல்லாரையும் அவங்க கவனிக்கிறாங்க.. விட்டுரு'..! மணல் கடத்தலுக்கு ஆதரவாக வி.ஏ.ஓ வை மிரட்டிய வருவாய் அதிகாரி..!