திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே இருக்கிறது ஜி.குப்பம் கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி(60). இவரது மனைவி மாங்கனி(55). இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும் ராம்குமார்(30) என்கிற மகனும் உள்ளனர். மகள்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து கணவருடன் வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். ஜி.குப்பத்தில் இருக்கும் வீட்டில் கோவிந்தசாமி தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். ராம்குமார் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதனால் அவருக்கு திருமணம் செய்வதை பெற்றோர் தாமதப்படுத்தி வந்திருக்கின்றனர். எனினும் தனக்கு விரைவில் திருமணம் நடத்தி வைக்கும்படி ராம்குமார் பெற்றோருடன் பல மாதங்களாக தகராறு செய்து வந்துள்ளார்.

அவரை சமாதானப்படுத்திய கோவிந்தசாமியும் அவரது மனைவியும் விரைவில் திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் ராம்குமார் தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இன்னும் சில நாட்களில் நல்ல பெண்ணாக பார்த்து கட்டாயம் திருமணம் செய்து வைக்கிறோம் என்று பெற்றோர் ராம்குமாரிடம் உறுதி அளித்திருக்கின்றனர். அதன்பிறகு மூன்று பேரும் இரவு தூங்க சென்றனர். எனினும் தனக்கு திருமணம் செய்து வைப்பதை பெற்றோர் தாமதப்படுத்துவது எண்ணி ஆத்திரத்தில் இருந்த ராம்குமார் அவர்களை கொலை செய்ய முடிவெடுத்திருக்கிறார். அதன்படி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெற்றோர் மீது அம்மிக்கல்லை தூக்கி போட்டுள்ளார். இதில் கோவிந்தசாமி மற்றும் மாங்கனி இருவரும் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். 

அதன்பின் உடனடியாக ராம்குமார் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் கோவிந்தசாமியும் மாங்கனியும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவலர்கள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் திருவண்ணாமலையில் தலைமறைவாக இருந்த ராம்குமாரை அதிரடியாக கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. திருமணம் செய்து வைக்க தாமதப்படுத்திய பெற்றோரை மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.