திருச்சி மாவட்டம் பொன்மலை அருகே இருக்கும் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(55). இவரது மனைவி பாப்பாத்தி அம்மாள். இந்த தம்பதியினருக்கு பிரகாஷ்(30 ) என்கிற மகன் இருக்கிறார். இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த வெண்ணிலா என்கிற பெண்ணிற்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.

இந்தநிலையில் திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு வந்த வெண்ணிலாவிற்கும் பாப்பாத்திக்கும் அடிக்கடி சண்டை நடந்திருக்கிறது. மாமியார் மருமகள் சண்டையால் பிரகாஷ் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனைவியை அழைத்துக்கொண்டு அவரது பெற்றோர் வீட்டில் நேற்று விட்டுள்ளார். இன்று அதிகாலை பிரகாஷ் மட்டும் திருச்சி திரும்பியுள்ளார். வீட்டிற்கு சென்ற அவர், தனது தாயிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த உடற்பயிற்சி செய்யும் தம்பிள்சை எடுத்து தாக்கியிருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த பாப்பாத்தி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினார்.

தடுக்க வந்த தந்தை ஆறுமுகத்தையும், பிரகாஷ் சரமாரியாக தாக்கி இருக்கிறார். இதில் அவர் நிலைகுலைந்து சரிந்து விழுந்தார். பின்னர் தனது மோட்டார் வாகனத்தை எடுத்துக்கொண்டு சாலையில் வேகமாக சென்றுள்ளார். அப்போது சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் பிரகாஷை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் தனது தாயை கொலை செய்த செய்தியை பிரகாஷ் கூறியிருக்கிறார். இதையடுத்து அவருடன் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர்.

அங்கு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த பாப்பாத்தியம்மாளின் உடலை பிரேத பரிதோசனைக்கு கொண்டு சென்றனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.