வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்து இருக்கிறது கொல்லமங்கலம் கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மனைவி ராஜம்மாள். வயது 80. இந்த தம்பதியினருக்கு முருகன் என்ற மகனும், ஜெயலட்சுமி, சாந்தி என்று இரண்டு மகள்களும் இருக்கின்றனர். அர்ஜுனன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ராஜம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று காலையில் ராஜம்மாளின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு தலை மற்றும் வாயில் ரத்தம் கசிந்த படி ராஜம்மாள் உயிரிழந்து கிடந்தார். 

அப்போது வீட்டின் உள்ளே ஆட்கள் இருக்கும் சத்தம் கேட்டிருக்கிறது. இதனால் அங்கிருந்த உறவினர்கள் உள்ளே சென்று பார்த்தனர் . அங்கு பரணில் ராஜம்மாளின் கொள்ளுப்பேரன் மோனிஷ் இருந்துள்ளார். இவர் ஜெயலக்ஷ்மியின் மகள் இந்திராவின் மகன் ஆவார். அவருடன் அவரது நண்பர்கள் ப்ரிஷ்வால், வினய் ஆகியோரும் இருந்தனர். அவர்களிடம் கத்தி மற்றும் மயக்க ஸ்பிரே இருந்தது . அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவர்கள் 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது வினய் மட்டும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து ஆம்பூர் தாலுகா காவல் நிலையத்திற்கு உறவினர்கள் தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த காவலர்கள் ராஜம்மாளின் கொள்ளுப்பேரனிடம்  விசாரணை நடத்தினர். விசாரணையில் நகைக்காக மூதாட்டியை மூன்று பேரும் கொலை செய்தது தெரியவந்தது. நேற்று காலை மூன்று பேரும் கொல்லமங்கலம் வந்துள்ளனர். பின்னர் ராஜம்மாளின் கொள்ளுப்பேரன் மோனிஷ் அவரது பாட்டியிடம் நகை மற்றும் பணம் கேட்டு இருக்கிறார். ஆனால் அதற்கு ராஜம்மாள் தர மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் அவரது முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து சரமாரியாக தாக்கி இருக்கின்றனர். இதில் பலத்த காயமடைந்த ராஜம்மாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறார்.

பின்னர் நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு மூவரும் தப்பியோட முயன்றுள்ளனர். அந்த நேரத்தில் தான் உறவினர்களிடம் வசமாக சிக்கியுள்ளனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். தப்பியோடிய வினய் தீவிரமாக தேடப்பட்டு வருகிறார்.