ஆண்டிப்பட்டி அருகே கல்லூரி மாணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜக்கம்பட்டி சீத்தாராம் தாஸ் நகரைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் நாகேந்திரபிரசாத் (வயது 18). ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 

விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்கள் 4 பேருடன் வெளியே செல்வதாக பெற்றோர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

இந்நிலையில் ஜக்கம்பட்டி அருகே உள்ள தனியார் பள்ளிக்கு பின்புறத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நாகேந்திர பிரசாத் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். இதை கண்ட பெற்றோர்கள் கதறி அழுதனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவருடன் சென்ற நண்பர்கள் எங்கு சென்றார்கள்? என தெரியவில்லை. எனவே இந்த கொலைக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.