திருவான்மியூரில் முன்விரோதம் காரணமாக வாலிபர் படுகொலை செய்யப்பட்டு, முடிந்தால் தேடி உடலை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கொலையாளிகள் தொலைபேசியில் தெரிவித்துள்ளனர். 

சென்னை திருவான்மியூர் ரங்கராஜபுரம் கெனால் பேங்க் சாலையை சேர்ந்தவர் கந்தன் என்ற கந்தகுமார் (வயது 28). கடந்த 2010-ம் ஆண்டு இதே பகுதியில் நடந்த சின்னய்யா கொலை வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். இவர் மயிலாப்பூரில் தனது தாயாருடன் வசித்து வந்தார். 

இந்நிலையில் நண்பர்களை சந்திக்க செல்வதாக வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து கந்தனின் உறவினர் ஒருவருக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது. இதில் பேசிய மர்ம நபர் கந்தனை கொலை செய்து உங்கள் பகுதியில் போட்டுள்ளோம். முடிந்தால் தேடி உடலை எடுத்துக்கொள்ளுங்கள் கூறி அழைப்பை துண்டித்தார். 

இதனையடுத்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பல இடங்களிலும் தேடி பார்த்தனர். பூண்டி அம்மன் கோவில் பின்புறம் உள்ள பாதாள சாக்கடையின் மூடி வழக்கத்துக்கு மாறாக சிறிது திறந்து இருந்தது. சந்தேகமடைந்த உறவினர்கள் அதை திறந்து பார்த்த போது பல வெட்டுக்காயங்களுடன் கந்தனின் உடல் கிடந்தது. 

இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் சின்னய்யா கொலைக்கு பழிக்குப்பழியாக கந்தன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.