புதுக்கோட்டை அருகே நண்பரை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த நெம்மக்கோட்டையைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன், ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். விடுமுறைக்கு ஊருக்கு வந்த சிவசுப்பிரமணியன், அவரது நண்பர் அப்துல் ரகுமானுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். இருவரும் பேசிக்கொண்டிருந்த போது வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. 

கடும் ஆத்திரம் அடைந்த அப்துல் ரகுமான், கட்டிடத்தில் கிடந்த இரும்பு கம்பியால் சிவசுப்பிரமணியத்தை பலமாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே சிவசுப்பிரமணியன் உயிரிழந்தார். 

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்த அப்துல் ரகுமானை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.