கிருஷ்ணகிரி அருகே, குடிபோதையில் சொத்துக்காக தகராறு செய்து வந்த மகனை, பெற்ற தந்தையே அரிவாளால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு கிராமத்தை சேர்ந்தவர் கிரு‌‌ஷ்ணப்பா (55). கூலித்தொழிலாளி. இவரது மகன் லோகே‌‌ஷ் (32). இவர் சென்னையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், லோகேஷ் அதே ஊரை சேர்ந்த கலா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.  திருமணத்திற்கு பிறகு லோகே‌‌ஷ் வேலைக்கு செல்லவில்லை. தினமும் மது குடித்துவிட்டு, தனக்கு சொத்தைப் பிரித்து கொடுக்கும்படி தந்தையிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். 

மகனின் செயலால் வெறுப்படைந்த தந்தை கிரு‌‌ஷ்ணப்பா, அவரது மனைவி ராதம்மாளும் ஓசூரில் உள்ள தனது மகள் மஞ்சுளாவின் வீட்டிற்கு சென்றுவிட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணப்பா, சானமாவு கிராமத்திற்கு திரும்பி வந்தார். அப்போது குடிபோதையில் வந்த லோகே‌‌ஷ் தனது தந்தையிடம் சொத்தை பிரித்து கொடுக்குமாறு பணம் கேட்டு தகராறு செய்தார். 

பின்னர், ஆத்திரமடைந்த லோகே‌‌ஷ் கீழே கிடந்த கட்டையை எடுத்து கிரு‌‌ஷ்ணப்பாவை அடிக்க பாய்ந்தார். லோகேஷிடம் இருந்த கம்பை பிடுங்கிய கிருஷ்ணப்பா, ஆத்திரத்தில் அவரை சரமாரியாக தாக்கினார். மேலும், வீட்டுக்குள் இருந்த அரிவாளை எடுத்து வந்தும் மகனை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே லோகேஷ் துடிதுடித்து உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லோகேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, கிரு‌‌ஷ்ணப்பாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.