தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே இருக்கிறது ஒக்கநாடு கீழையூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சந்தோஷ். திருப்பூரில் இருக்கும் ஒரு பனியன் கம்பெனியில் வேலை வருகிறார். இவருக்கும் கருவிழிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சத்யா(20) என்கிற பெண்ணிற்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு மனைவியுடன் திருப்பூரில் வீடு எடுத்து சந்தோஷ் தங்கியுள்ளார்.

இந்தநிலையில் கடந்த மாதம் வழக்கம் போல வேலைக்கு சென்ற சந்தோஷ் அதன்பிறகு வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சத்யா பல இடங்களில் தேடி பார்த்திருக்கிறார். எங்கும் சந்தோஷ் கிடைக்காததால் உறவினர்களுடன் திருப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். சந்தோஷின் செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அவர் சொந்த கிராமமான கீழையூரில் அந்த எண் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து காவல்துறையினர் செல்போன் சிக்னல் வந்த இடத்திற்கு சத்யாவுடன் சென்றனர். ஆனால் அங்கு சசிகலா(19) என்கிற இளம்பெண் இருந்தார். இதனால் காவலர்கள் குழம்பி போயினர். அவரிடம் விசாரணை செய்தபோது சந்தோஷின் மனைவி என்று கூறியிருக்கிறார். இதைக்கேட்ட சத்யா அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் சந்தோஷ் ஏமாற்றி திருமணம் செய்தது தெரிய வந்தது. 

இதையடுத்து சசிகலா மூலம் செல்போனில் சந்தோஷை பேச வைத்து அவரை வீட்டிற்கு வரவழைத்தனர். காவலர்களும் சத்யாவும் வீட்டில் இருப்பதை அறியாமல் வந்த சந்தோஷ் வசமாக சிக்கிக்கொண்டார். அவரை கைது செய்து பட்டுக்கோட்டை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். அப்போது தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்தன. இதே போல மொத்தம் 8 பெண்களை திருமணம் செய்த அதிர்ச்சி தகவலை சந்தோஷ் தனது வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார். இதைக்கேட்டு சத்யாவும், சசிகலாவும் அதிர்ச்சியில் கதறினர்.

ஒவ்வொருமுறையும் திருமணம் செய்து விட்டு அதை மறைத்து அடுத்தடுத்து திருமணம் செய்திருக்கிறார். இவரிடம் வரதட்சணையாக பெண் வீட்டார் நிறைய பணம் கொடுத்திருக்க கூடும் என்பதால் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.