நாகை மாவட்டம் திருமருகல் அருகே இருக்கிறது வீரப்பெருமால்நல்லூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் தீனா. மாற்றுத்திறனாளி பெண்ணான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் என்கிற இளைஞருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நண்பர்களாக பழகிய இவர்கள் நாளடைவில் காதலிக்க தொடங்கியுள்ளனர். இருவரும் நெருங்கிப்பழகியதில் கடந்த ஆண்டு தீனா கர்ப்பமடைந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தீனாவின் உறவினர்கள் அய்யப்பன் வீட்டில் சென்று முறையிட்டுள்ளனர். ஆனால் தீனாவை திருமணம் செய்ய அய்யப்பன் மறுத்துத்திருக்கிறார். இதுதொடர்பாக தீனா சார்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அய்யப்பன் உறவினர்கள் காவல்துறையில் உயர்பதவியில் இருப்பதால் புகார் சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே தீனாவிற்கு பிரசவம் நடந்து குழந்தை பிறந்துள்ளது. அப்போதும் அய்யப்பன் திருமணம் செய்து கொள்ள மறுத்திருக்கிறார்.

இதன்காரணமாக பச்சிளம் குழந்தையுடன் அய்யப்பன் வீட்டு வாசலில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களுடன் தீனா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தான் மாற்று சாதி என்பதாலும் மாற்று திறனாளி என்பதாலும் தன்னை அய்யப்பன் திருமணம் செய்ய மறுப்பதாக தீனா குற்றம் சாட்டியுள்ளார். உறவினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட தீனா வருவதை அறிந்ததும் அய்யப்பன் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டார். தகவலறிந்து வந்த காவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

கைக்குழந்தையுடன் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் காதலன் வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.