ஈரோட்டில் வாலிபரின் தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்து அந்த தலையை பாலத்தில் வைத்து சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு அருகே சூலை நெசவாளர் காலனி லட்சுமிநகர் பகுதியில் ஓடைப்பள்ளம் உள்ளது. இந்த ஓடைப்பள்ளத்தில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலையை மட்டும் யாரோ அரிவாளால் வெட்டி எடுத்துவந்து பாலத்தின் மீது வைத்துவிட்டு சென்றுவிட்டனர். அந்த வழியாக வந்த பொதுமக்கள் இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 


 
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தலை மட்டும் தனியாக பாலத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உடலை தேடியபோது அங்கிருந்து 300 அடி தூரத்தில் கொலை செய்யப்பட்டவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கொலை செய்யப்பட்டவர் சேலம் மாவட்டம் பச்சப்பட்டி நாராயணன் நகரைச் சேர்ந்த பிரித்திவிராஜ் (24) என்பது தெரியவந்தது.

ஈரோட்டில் உள்ள ஒரு சைக்கிள் பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். அவர் தனது நண்பர்கள் மணிகண்டன், முஸ்தபா, முரளி, சந்தானபாரதி ஆகியோருடன் வேலைக்கு சென்று வந்துள்ளார். இவரது நண்பர்கள் பெரிய அக்ரஹாரம் நெசவாளர் காலனி பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு 5 பேரும் மது வாங்கிக் கொண்டு சூளை நெசவாளர் காலனி பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர்,  அந்த 5 பேரும் மது குடித்தனர். அப்போது ஒருவருக்கொருவர் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த முஸ்தபா, பிரித்திவிராஜை தாக்கியுள்ளார்.

இதனால், பிரித்திவிராஜூம் அவரை திருப்பி அடித்துள்ளார். முஸ்தபாவை எப்படி அடிக்கலாம் என்று கூறி குடிபோதையில் இருந்தவர்கள் பிரித்திவிராஜை கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த நிலையில் கிடந்த பிரித்திவிராஜை கொடூரமாக கழுத்தை அறுத்து பின்னர் தலையை மட்டும் தனியா எடுத்து வந்து ஓடைப்பாலத்தில் வைத்து விட்டு சென்றது தெரியவந்தது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு மணிகண்டன் காயம் அடைந்து ஈரோடு அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை வருகின்றனர். குடிபோதை நடந்த வாக்குவாதத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக? கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.