திருநெல்வேலியைச் சேர்ந்தவர் விஜய்சங்கர். இவருக்கும் வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த பானு(27) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற பெண்ணுக்கும் பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. முதலில் நண்பர்களாக பழகியவர்கள் நாளடைவில் காதலர்களாக மாறினர். இருவரும் தினமும் பல மணி நேரம் தொலைபேசியில் பேசி தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இதையடுத்து விஜய் சங்கர் தனது காதலியை நேரில் சந்திக்க திட்டமிட்டார். அதற்காக ஒரு மாதத்திற்கு முன்பு காட்பாடி அருகே இருக்கும் அம்முண்டி என்கிற கிராமத்தில் அறை எடுத்து தங்கியுள்ளார். தினமும் அவர்கள் இருவரும் சந்தித்து பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விஜய் சங்கரின் அறையில் இருவரும் தனியாக இருந்துள்ளனர்.

வெகுநேரம் பேசிக் கொண்டிருந்த அவர்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த விஜய் சங்கர் அதிகாலை 2 மணியளவில் பானுவை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி இருக்கிறார். இதில் பலத்த காயமடைந்து வலியால் அலறி துடித்த பானு விஜய் சங்கரிடம் இருந்து விஜய் சங்கரை தாக்கி தள்ளிவிட்டு வீட்டிற்கு வெளியே ஓடி வந்துள்ளார்.

பின்னர் வீட்டின் கதவை வெளிப்பக்கமாக பூட்டி தாழ்ப்பாள் போட்ட பானு, தனது சகோதரரை தொலைபேசியில் அழைத்த நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவரது சகோதரர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர் அங்கு படுகாயத்துடன் கிடந்த பானுவை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தார்.

காட்பாடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் பானு வந்த காரை வழிமறித்து விசாரித்துள்ளனர். அப்போது நடந்த சம்பவம் தெரியவந்து உடனே காவல்துறையினர் அம்முண்டி கிராமத்திற்கு சென்றனர். அங்கு பானு குறிப்பிட்ட அறைக்கு சென்று பார்த்தபோது விஜய் சங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தார். அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவலர்கள் பானுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.