வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 16 வயது நிரம்பிய சிறுமியான இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர் பூபதி(20). மாட்டு வண்டி தொழிலாளியான பூபதிக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நண்பர்களாக பழகிய இருவரும் நாளடைவில் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே தற்போது கொரோனா பரவுதல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் ரேவதி வீட்டில் இருந்துள்ளார்.

இதனால் சிறுமியை அடிக்கடி சந்தித்த பூபதி ஆசை வார்த்தைகள் கூறி அவரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதில் சிறுமி ரேவதி கர்ப்பம் அடைந்துள்ளார். இதையடுத்து பூபதியிடம் தனது நிலையை கூறி தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் சிறுமி கர்ப்பம் அடைந்தது தெரிய வந்ததும் பூபதி அவரை விட்டு விலக தொடங்கியுள்ளார். பின் திடீரென சிறுமியுடனான தொடர்புகளை துண்டித்து பூபதி தலைமறைவானார்.

இதனால் செய்வதறியாது திகைத்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியிருக்கிறார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள் தலைமறைவாக இருந்த பூபதியை அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பத்தாம் வகுப்பு சிறுமி ஒருவரை வாலிபர் கர்ப்பமாக்கி ஏமாற்றிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.