சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இருக்கிறது ஜலகண்டாபுரம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பானு(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 17 வயது இளம்பெண்ணான இவர் சேலத்தில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு கடைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உறவினர்கள் உதவியுடன் பல இடங்களிலும் தேடிப்பார்த்தனர்.

ஆனால் பானுவை கண்டுபிடிக்க இயலவில்லை. இதையடுத்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில் பானுவிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார்(21) என்கிற இளைஞருக்கு பழக்கம் இருப்பது தெரியவந்தது. சதிஷ்குமாரை விசாரணைக்காக தேடிய போது அவரும் காணாமல் போயிருந்தார். அதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரது மொபைல் எண்ணை வைத்து கண்காணித்தனர்.

அதில் அவர் உறவினர் ஒருவர் வீட்டில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அங்கு விரைந்த போலீசார் சதிஷ்குமாரை கைது செய்தனர். அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த மாணவி பானுவையும் மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில், திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, சதிஷ் குமார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பானு தெரிவித்துள்ளார். அவரது வாக்குமூலத்தின் படி, சதிஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.