கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் கடைகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் வீடுகளில் இருக்க அரசு அறிவுறுத்தி இருக்கிறது. தமிழகத்திலும் ஊரடங்கு நடைமுறை மிகக்கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருக்கின்றன. இதன் காரணமாக மது கிடைக்காமல் குடிமகன்கள் பெரிதும் திண்டாடி வருகின்றனர். பல்வேறு இடங்களில் சட்டத்திற்கு விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்றும், கள்ளச்சாராயம் காய்ச்சியும் தொடர்ந்து பலர் கைதாகி வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை அருகே யூடியூப் வீடியோ பார்த்து கள்ளச் சாராயம் காய்ச்சிய 6 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இருக்கும் தேனூர் பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிப்பதற்காக பழரச ஊறல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக பழச்சாறுகளை பிளாஸ்டிக் குடத்தில் போட்டு மண்ணில் குழி தோண்டி புதைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கைப்பற்றிய போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கள்ளச்சாராயம் காய்ச்ச அவற்றை தயார் செய்த 6 வாலிபர்கள் காவலர்களிடம் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தேனூர் சேம்பர் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார்(25) என்கிற இளைஞர் யூடியூப் வீடியோ மூலம் எளிதாக சாராயம் காய்ச்சி அருந்தலாம் என்றும் அதனால் பாதிப்புகள் எதுவும் ஏற்படாது என கூறியதையடுத்து வாலிபர்கள் சேர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்கு பதிந்த போலிசார் சிறையில் அடைத்தனர். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சியதில் தொடர்புடைய 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்