தென்காசி மாவட்டம் முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்(24). சென்னையில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்லூரி மாணவிகளுக்கு செல்போன் மூலமாக ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுப்பதாக திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கல்லூரி மாணவி தவற விட்ட செல்போன் ஒன்று வினோத்திற்கு கிடைத்திருக்கிறது. அதில் இருந்த எண்கள் மூலம் பெண்களுக்கு தொடர்பு கொண்டு பெண் குரலில் பேசியிருக்கிறார். பின் ஆசை வார்த்தைகள் கூறி ஆபாச படங்கள் மற்றும் காணொளிகளும் அனுப்பியிருக்கிறார் வினோத். இதுமட்டுமின்றி மற்றொரு எண்ணில் இருந்து ஆபாச படங்கள் அனுப்பிய பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சரும் கொடுத்துள்ளார். அதே போல நாற்றம்பள்ளியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு ஆபாச படங்களை அனுப்பவே அப்பெண்ணின் பெற்றோர் ஆதாரத்துடன் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவலர்கள் சென்னை குரோம்பேட்டை பகுதியில் வினோத் தங்கி இருப்பதை அறிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு வினோத் கைது செய்யப்பட்டு நாற்றம்பள்ளி காவல்நிலையத்திற்க்கு கொண்டு வரப்பட்டார். அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்த போது 70 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆபாச படங்கள் மற்றும் காணொளிகள் அனுப்பியிருப்பது உறுதியானது. இதையடுத்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதியப்பட்டு வினோத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.