சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் ரயிலில் அடிப்பட்டு இறந்ததாக கூறப்பட்ட வந்த நிலையில், அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. இதுதொடர்பாக 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

புத்தாண்டு தினத்தன்று சென்னையை அடுத்த கிண்டி-பரங்கிமலை ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தில் 21 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்துடன் இறந்து கிடந்தார். பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் மடுவன்கரை மசூதி காலனியை சேர்ந்த பிரகாஷ் (வயது 21) என்பது தெரியவந்தது. இந்நிலையில், பிரகாஷின் உடற்கூறாய்வு அறிக்கையில், ரயிலில் அடிப்பட்டு இறக்கவில்லை, அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்தனர். 

புத்தாண்டை முன்னிட்டு பேனர்கள் வைப்பதில் பிரகாஷ் மற்றும் ஆனந்தன் என்பவருக்கு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது பிரகாஷ் அவர்களை பாட்டிலால் தாக்கியதா கூறப்படுகிறது. இதனையடுத்து சமாதானம் பேசுவதாக கூறி பிரகாஷை ஆனந்தன் தரப்பினர் மடுவங்கரையில் உள்ள ஒரு மாந்தோப்புக்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது. 

அங்கு சென்ற பிரகாஷை ஆனந்தன், ஸ்ரீனிவசன் உள்ளிட்ட 9 பேர்  சரமாரியாக அடித்து, கத்தியா குத்திவிட்டு ரயிலின் முன்பு தூக்கி எறிந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஆனந்தன் என்பவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.