வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே இருக்கும் ஆர்.எஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோவலன். இவரது மகன் விஜயகுமார் வயது 25. இவர் அந்த பகுதியில் பெயிண்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி நான்சி. இந்த தம்பதியினருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றிருந்தது. தற்போது விழுப்புரத்தில் இருக்கும் அரசு அலுவலகம் மற்றும் கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்காக விஜயகுமார் சென்றிருந்தார்.

இந்த நிலையில் அந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் இருந்து துர்நாற்றம் அதிகமாக வீசியுள்ளது. இதனால் அங்கு பணியாற்றுபவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் துர்நாற்றம் வரும் திசை நோக்கி சென்று பார்த்தபோது உள்பக்கம் தாள் போடப்பட்ட நிலையில் ஒரு அறையிலிருந்து துர்நாற்றம் வீசியது தெரிந்தது.

இதனால் அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விழுப்புரம் தாலுகா காவலர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது விஜயகுமார் உடல் அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து விஜயகுமாரின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் அவரது உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைப்பதற்காக ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது விஜயகுமார் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் காட்பாடி நான்கு முனை சந்திப்பு பகுதியில் இருக்கும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அவரது மரணம் குறித்து தீவிரமாக விசாரிப்பதாக காவலர்கள் கூறியதையடுத்து உறவினர்கள் விஜயகுமாரின் உடலை பெற்றுக்கொண்டனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.