திருச்சி மாவட்டம் விராலிமலை அருகே இருக்கிறது பாத்திமா நகர். திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே இருக்கும் இப்பகுதியில் நேற்று 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் கிடந்தது. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த விராலிமலை காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்த அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு காவலர்கள் கொண்டு சென்றுள்ளனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர், இளம்பெண்ணாக தெரிவதால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்கிற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர். காணாமல் போனவர்கள் பட்டியல் குறித்தும் தகவல் பெறப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இளம்பெண் ஒருவரின் சடலம் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.