விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே திருமண விருந்தின் போது இளம்பெண்ணை சில வாலிபர்கள் ஆபாசமாக படம் எடுத்தனர். அதை தட்டிக்கேட்ட மணபெண்ணின் தாய்மாமனை அடித்து கொன்றனர். இதுதொடர்பாக போலீசார், 7 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். 

விருதுநகர் மாவட்டம்  நரிக்குடி அருகே பிள்ளையார்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல். இவரது சகோதரியின் மகள் ஈஸ்வரிக்கும், செந்தில்வேலு என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இதையொட்டி, புதுமண தம்பதிக்கு கறி விருந்து கொடுக்க முருகவேல், தனது வீட்டுக்கு அழைத்தார். அதன்பேரில் அவர்களும் வந்தனர். 

அப்போது உணவு பரிமாறிய பெண்ணின் தங்கையை அங்கிருந்த வாலிபர்கள், சிலர் தங்களது செல்போனில் ஆபாசமாக படம் பிடித்தனர். இதை பார்த்த முருகவேல், அவர்களை தட்டிக் கேட்டார். இதில், இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. 

இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் அங்கிருந்த கற்கள், கட்டையால் முருகவேலை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பினர். இதை பார்த்த உறவினர்கள், படுகாயமடைந்த தங்கவேலுவை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். புகாரின்படி அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.