விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ்(50). கட்டிட தொழிலாளியான இவர் ஆந்திர மாநிலம் விஜய நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். இந்த தம்பதியினருக்கு லாவண்யா(17) என்கிற மகள் இருந்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் கட்டப்படும் ஒரு கட்டிடத்தில் மேஸ்திரியாக ஜெயராஜ் தற்போது வேலை பார்த்து வருகிறார். அதனால் குடும்பத்துடன் அங்கேயே தங்கி இருக்கிறார். இவர் வேலை பார்க்கும் அதே இடத்தில் ஆந்திர மாநிலம் விஜயநகரை சேர்ந்த துர்கா ராவ் என்ற வாலிபரும் வேலை செய்து வந்திருக்கிறார்.

துர்கா ராவும் லாவண்யாவும் ஒரே பள்ளியில் ஒன்றாக படித்து வந்திருக்கின்றனர். அப்போது லாவண்யாவை துர்கா ராவ் காதலித்து வந்திருக்கிறார். ஆனால் அவரது காதலை லாவண்யா ஏற்கவில்லை. இதனால் லாவண்யா தங்கியிருக்கும் ஊருக்கே வந்த துர்காராவ் ஜெயராஜிடமே கொத்தனார் வேலைக்கு சேர்ந்துள்ளார். அதன் பிறகு தொடர்ந்து லாவண்யாவிற்கு காதல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். ஆனால் லாவண்யா அவரை உதாசீனப்படுத்தி இருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த துர்கா ராவ் லாவண்யாவை கொலை செய்ய முடிவெடுத்தார். அதன்படி நேற்று வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த லாவண்யாவை கத்தியைக் கொண்டு சரமாரியாக வயிறு நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் குத்தியிருக்கிறார். இதில் பலத்த காயம் அடைந்த லாவண்யா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய துர்கா ராவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.