கள்ளக்காதல் விவகாரத்தில் இளம் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கொலையாளியை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். 

கடலூர் மாவட்டம் புவனகிரி பேருந்து நிலையம் அருகே  மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தின் முதல் தளத்தில் நேற்று துர்நாற்றம் வீசியது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். அப்போது ரமேஷ் என்பவருக்கு சொந்தமான ஆடிட்டர் அலுவலகம் அருகே உள்ள மாடிப்படிக்கட்டின் கீழே சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சடலம் நிர்வாணமாக அழுகிய நிலையில் கிடந்தது. 

அவரது நெற்றியில் சிறிய ரத்தக்காயம் இருந்தது. இதையடுத்து, தடவியல் நிபுணர்கள் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது தொடர்பாக புவனகிரி போலீசார் கொலை வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கினர். இதில், இறந்து கிடந்த பெண் புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு பிஸ் பாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சத்பா(35) என்பதும், இவருக்கு2 மகன்கள் இருப்பதும் தெரியவந்தது. இவர் 5 வருடங்களுக்கு முன்பு புதுச்சேரியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபோது கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை சேர்ந்த மாறனுடன் பழக்கம் ஏற்பட்டிருந்ததும் தெரியவந்தது. 

தற்போது மாறன் புவனகிரி அடுத்த ஆயிரபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி ஆடிட்டர் அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக பணியாற்றிய நிலையில் தொடர்ந்து சத்யாவுடன் அவர் தொடர்பில் இருந்ததும் அம்பலமானது. எனவே மாறனின் அழைப்பின் பேரில்  சத்யா அங்கு வந்திருக்கலாம். இருவரும் தனிமையில் இருக்கும் போது தகராறு ஏற்பட்டு கொலையில் முடிந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன்பேரில் விசாரணையை தீவிரப்படுத்தினர். 

இதனையடுத்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சத்யா கொலை செய்யப்பட்டு கிடந்த கட்டிடத்திற்கு இரவு 7.10 மணியளவில் செல்வதும் அவரை மாறன் வந்து அழைத்து செல்வதும் பின்னர் 2 மணிநேரம் கழித்து மாறன் மட்டும் தனியாக வெளியே செல்வதும் பதிவாகி இருந்தது. மாறன் செல்போனை போலீசார் தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் போலீசாருக்கு மேலும் சந்தேகம் வலுத்தது. இந்நிலையில், சத்யாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக சத்யாவின் உறவினர்களிடம் புவனகிரி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.