காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை  கல்லூரி வளாகத்தில் வைத்து காரில் கடத்த முயன்ற வாலிபர் மற்றும் அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.

கோவை கனியூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் திருப்பூரை சேர்ந்த ஒரு மாணவி  சுவேதா 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரை திருப்பூர் ஓடக்காடு முத்துசாமி வீதியை சேர்ந்த ரஞ்சித்  என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தார். ரஞ்சித் அடிக்கடி மாணவியை சந்தித்து தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனால் மாணவி தொடர்ந்து மறுத்து வந்தார். காதலிக்க மறுத்ததால் மாணவி சுவேதாவை  கடத்தி சென்று திருமணம் செய்ய ரஞ்சித்குமார் முடிவு செய்தார்.

அதன்படி நேற்று ரஞ்சித்குமார் ஒரு காரில் தனது நண்பரான சக்திபாஷா நகரை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவருடன் மாணவி படிக்கும் கல்லூரி வளாகத்தில் அவருக்காக காரில் காத்து இருந்தார்.

மாணவி சுவேதா வந்ததும் அவரை சந்தித்த ரஞ்சித் தன்னுடன் வருமாறும், திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார் ஆனால், மாணவி சுவேதா வர மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ரஞ்சித் மாணவி சுவேதாவை தனது காரில் கட்டாயப்படுத்தி ஏற்றி கடத்தி செல்ல முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டார். உடனடியாக ரஞ்சித் மாணவி சுவேதாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

பின் இது குறித்து மாணவி சுவேதா  கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் மாணவி சுவேதாவை கடத்தி செல்ல முயன்ற ரஞ்சித் மற்றும் அவரது நண்பர் அப்துல் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 2 பேர் மீதும்  வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.