முந்திரி தோப்பில் இளம்பெண்ணை எரித்துக் கொன்ற காதலனை போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த நண்பரும் சிக்கினார். 

புதுவை ஒட்டிய ஆரோவில் பொம்மையார்பாளையம் ரோட்டில் உள்ள முந்திரிதோப்பில் கடந்த 30ம்தேதி சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தீயில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று பெண்ணின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பினார். இதனைத் தொடர்ந்து இளம்பெண்ணின் முகம் முழுமையாக எரிந்திருந்ததால் அவரை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டதால்,  போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று  காவல் நிலையத்துக்கு வந்த மரக்காணம், பகுதியைச் சேர்ந்த அப்பாத்துரை என்ற வாலிபர் தனது அக்கா லட்சுமியை கடந்த 3 நாட்களாக காணவில்லை என்று புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து, அவரது அம்மா மற்றும் 2 சகோதரிகள், அப்பாத்துரை உள்ளிட்டோரை கனகசெட்டிகுளம் பிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு உடல் முழுவது கருகி எரிந்த நிலையில் இருந்த பெண்ணின் உடலை பார்த்து அது தனது மகள் லட்சுமிதான் என மனோரஞ்சிதம் கதறி அழுதார். 

இதையடுத்து போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் பல திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், எரித்துக் கொல்லப்பட்ட இந்த பெண்ணின் பெயர் லட்சுமி, இவர் புதுச்சேரி, நேருவீதியில் உள்ள பாத்திரக் கடையில் வேலை செய்ததும், அங்கு பணியாற்றிய புதுச்சேரி கென்னடி நகரைச் சேர்ந்த டிரைவர் அருண்குமாருடன் பழக்கம் இருந்ததும் தெரியவந்தது.

கடந்த 29ம்தேதி வழக்கம்போல் வீட்டில் இருந்து பாத்திரக் கடைக்கு வேலைக்கு சென்ற லட்சுமி அதன்பிறகு வீடு திரும்பவில்லை என்று உறவினர்கள் தெரிவித்த நிலையில், அருண்குமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அருண்குமார் அவரது நண்பருடன் சேர்ந்து லட்சுமியை கொலை செய்து எரித்ததை ஒப்புக் கொண்டார். 

இதையடுத்து அருண்குமாரின் நண்பரிடம் நடத்திய விசாரணையில்; அருண்குமாரும், லட்சுமியும் காதலித்து வந்துள்ளனர். இதனால் இவர்கள் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் கர்ப்பமான லட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அருண்குமாரை வலியுறுத்தி வந்துள்ளார். அதற்கு அவர் கர்ப்பத்துக்கு நான் காரணமில்லை என்று மறுக்கவே அவர்களிடையே சண்டை வந்துள்ளது.  

இந்நிலையில், சம்பவத்தன்று வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த லட்சுமியிடம், உன்னிடம் நான் தனிமையில் பேச வேண்டுமென கூறி அழைத்துள்ளார். அப்போது  கூடவே தனது நண்பர் ஒருவரையும் தொடர்பு கொண்டு பொம்மையார்பாளையம் வருமாறு அழைத்துள்ளார். பின்னர் லட்சுமியை அருண்குமார் சந்தித்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அருண்குமார் லட்சுமியை ஓங்கி அடித்ததில் மயக்கமடைந்து கீழே விழுந்த லட்சுமியை, அருண்குமாரும், அங்கு வந்திருந்த நண்பரும் ஒரு பைக்கில் வைத்து பொம்மையார்பாளையம் ரோட்டில் உள்ள முந்திரி தோப்புக்கு கொண்டு சென்று  அவரது உடலை கீழே போட்டு பைக்கில் இருந்த பெட்ரோலை பிடித்து ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்துவிட்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.