இன்சூரன்ஸ் பணத்தை வாங்க, பெற்ற தாய் - தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலைச் சேர்ந்த நாராயண ரெட்டி தரிசியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சரக்குக்கு அடிமையான நாராயண ரெட்டி, தனது பெற்றோரிடம் அடிக்கடி பணம் கேட்டு நச்சரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், சரக்கு அடிக்கவும், வெளியில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்கவும், தான் வேலைபார்த்த நிதி நிறுவனத்தின் வசூல் பணம் 3 லட்சம் ரூபாயை முறைகேடு செய்துள்ளார். இதனைக் கண்டுபிடித்த அந்த நிறுவனம் உடனடியாக பணத்தை ஒப்படைக்க நெருக்கடி கொடுத்துள்ளது.

இந்நிலையில், தனது தாய் ஆதியம்மா பெயரில் பஜாஜ் அலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 15 லட்ச ரூபாய்க்கு நாராயண ரெட்டி இன்சூரன்ஸ் செலுத்தி வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி இரவில் தனது தாய் ஆதியம்மாவிற்கும் தந்தை வெங்கட் ரெட்டிக்கும் மோரில் தூக்க மாத்திரையை அதிகளவில் கலந்து கொடுத்துள்ளார். பின், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு கை மணிக்கட்டு மற்றும் கழுத்தை அறுத்து இருவரையும் கொலை செய்துள்ளார். மறுநாள் காலை யாரோ மர்ம நபர்கள், தனது பெற்றோரைக் கொன்றுவிட்டு பணத்தை எடுத்துச் சென்றுவிட்டதாக கதறி அழுது நாடகமாடியுள்ளார்.

இதனையடுத்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் நாராயண ரெட்டி தனது தாய் தந்தையை இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்து நாடகமாடியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.