Asianet News TamilAsianet News Tamil

திருவாரூரில் இளைஞரை அடித்து கொன்று மண்ணில் புதைத்த மர்ம நபர்கள்; காவல்துறை விசாரணை

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கோரையாற்றில் 24 வயது இளைஞர் கொலை செய்யப்பட்டு மண்ணில் புதைத்த மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

young man killed by unknowned persons in thriuvarur
Author
First Published Apr 15, 2023, 1:15 PM IST | Last Updated Apr 15, 2023, 1:15 PM IST

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே முல்லை வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசீர்வாதம். இவரது மகன் (திருமாவளவன் 24). இவர் கும்பகோணம் பகுதியில் அறுவடை இயந்திரம் ஓட்டி வருகிறார். இந்த நிலையில் கடந்த 9ம் தேதி உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு கும்பகோணத்துக்கு  குடும்பத்துடன் சென்று வந்துள்ளார். இந்நிலையில், அன்று இரவில் இருந்து திருமாவளவன் வீட்டுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. 

துக்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்லாமல் வழக்கம் போல் வேலைக்கு சென்றிருக்கலாம் என்று நினைத்து வீட்டில் இருந்தவர்களும் அதனை பெரிதாகக் கருதவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் திருமாவளவனின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததை அறிந்து, அவரது அறுவடை இயந்திர உரிமையாளரிடம் குடும்பத்தார் விசாரித்துள்ளனர். அதில், திருமாவளவன் வேலைக்கு வரவில்லை என தெரியவந்தது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த திருமாவளவனின் தந்தை ஆசீர்வாதம் மற்றும் அவரது குடும்பத்தினர் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே, முல்லைவாசல் மதகடி அருகே மணல் லாரியில் மணல் ஏற்றி வந்த நபர்கள், மனித உடல் ஒன்று புதைக்கப்பட்டு இருப்பதை அறிந்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை தோண்டி எடுத்துப் பார்த்ததில் திருமாவளவனின் உடல் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது உடல் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலைச் சம்பவம் எதனால் நடந்தது என்பது குறித்து நீடாமங்கலம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமாவளவனின் நண்பர் ஸ்ரீதர் என்பவரை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios