காஞ்சீபுரத்தில் பிரபல ரவுடியின் உறவினர் சரமாரியாக கத்தியால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதையொட்டி மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காஞ்சீபுரம் திருப்பருத்திக்குன்றம் பகுதியை சேர்ந்த கருணாகரன், பிரபல ரவுடி தணிகாவின் உறவினர். இவர் காஞ்சீபுரம் வணிகர் வீதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று மாலை நிதி நிறுவனத்தில் கருணாகரன் பணிபுரிந்து கொண்டு இருந்தார். அவருடன் விக்கி என்கின்ற விக்னேஷ் உடன் இருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 7-க்கும் மேற்பட மர்மநபர்கள் நிதி நிறுவனத்தின் உள்ளே நுழைந்து கருணாகரனை கத்தியால் சரமாரியாக வெட்டினர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விக்கி அவர்களை தடுக்க முயன்றார். இதில் அவருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது. வெட்டுக்காயங்களுடன் வெளியே ஓடி வந்த கருணாகரனை அவர்கள் விரட்டிச்சென்று மீண்டும் கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதைத் தொடர்ந்து அவர்கள் தப்பிச்சென்று விட்டனர்.

இந்த கொலை குறித்து தகவல் கிடைத்த பெரிய காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த கருணாகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் தப்பி ஓடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.