ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்ணை வாலிபர் உயிருடன் எரித்து கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம்  சின்னசேலம் அருகே பாக்கம்பாடி காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த சின்னத்துரைக்கும் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்த அருணாதேவிக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். சின்னத்துரை சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அருணாதேவி தனது 2 மகன்களுடன் பாக்கம்பாடி காட்டுகொட்டாயில் தனது மாமியாருடன் வசித்து வருகிறார். கடந்த 1 ஆண்டுக்கு முன்பு அருணாதேவியின் பெரியம்மா மகன் பிரசாந்த் பொங்கல் சீர்வரிசை கொண்டு வந்தார். அவருடன் அவரது நண்பர் ஏழுமலை என்பவரும் வந்தார். 

அருணாதேவியை பார்த்ததும் ஏழுமலைக்கு ஆசை ஏற்பட்டது. பின்னர் அவரை ஒருதலையாக காதலிக்க தொடங்கினார். அதன் பின்பு அருணாதேவியின் செல்போன் நம்பரை வாங்கிய  ஏழுமலை தனது சொந்த ஊருக்கு சென்ற பின்பு அருணாதேவியிடம் செல்போனில் பேசத் தொடங்கினார். முதலில் அருணாதேவி தனது அண்ணனின் நண்பர் தானே என நினைத்து பேசினார். ஆனால் ஏழுமலையின் பேச்சில் திடீரென்று மாற்றம் ஏற்பட்டது. இதனால் அவரிடம் பேச மறுத்தார்.

ஆனால் தினமும் ஏழுமலை செல்போனில் அருணாதேவியிடம் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்து வந்துள்ளார். நான் உன்னை விரும்புகிறேன் என்று சொல்லி சொல்லியே அருணாதேவியை ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளார். நீ நடந்து கொள்ளும்முறை சரியில்லை. இதுபற்றி எனது அண்ணனிடமும், எனது கணவரிடமும் சொல்லி விடுவேன் என்று கூறினார். பின்பு அருணாதேவி தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். 

பலமுறை ஏழுமலை செல்போனில் அருணாதேவியிடம் பேச முயன்றார். போன் சுவிச்ஆப் செய்யப்பட்டிருந்ததால் அவரால் பேச முடியவில்லை. இதைத்தொடர்ந்து அருணாதேவியை நேரில் சந்திக்க ஏழுமலை முடிவு செய்தார். அதன்படி நேற்று ஏழுமலை பாக்கம்பாடி காட்டுக்கொட்டாய்க்கு வந்தார். மாமியார் வெளியே சென்ற நேரம் பார்த்து வீட்டில் தனியாக அருணாதேவியிடம்  நான் உன்னை விரும்புகிறேன். எனது ஆசைக்கு இணங்கு என்று கூறினார். இதைக்கேட்ட அருணாதேவி அதிர்ச்சியடைந்து வீட்டை விட்டு வெளியேபோ என்று கத்தியுள்ளார். 

ஆனால், ஏழுமலை வெறிகொண்டு அவரை கட்டிபிடிக்க முயன்றுள்ளார், அவர் பிடியில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க அருணாதேவி அங்கும் இங்கும் ஓடியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஏழுமலை வீட்டில் கேனில் இருந்த மண்எண்ணையை எடுத்து அருணாதேவியின் உடலில் ஊற்றி தீவைத்துள்ளார்.

இதில் அருணாதேவியின் உடலில் தீ பிடித்தது. அவர் கூச்சல்போட்டு அலறித்துடித்துள்ளார், அருகில் நின்ற ஏழுமலை உடலிலும் தீ பிடித்தது. 2 பேரின் உடலிலும் தீ பிடித்து எரிந்தது. அவர்கள் கூச்சல்போட்டு அலறியதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்பு அவர்கள் அருணாதேவி, ஏழுமலை உடலில் பிடித்த தீயை அணைத்தனர். இதில் 2 பேரும் உடல் கருகினர். பின்பு அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் நேற்று இரவு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்றுவரும் அருணாதேவியிடம் வாக்குமூலம் பெற்றனர். அதன்பின்பு பெண்ணை உயிருடன் எரித்துக்கொல்ல முயன்ற ஏழுமலை மீது கொலை முயற்சி வழக்குபதிவு செய்யப்பட்டது. அரசு ஆஸ்பத்திரியில் 2 பேருக்கும் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.