சிறுவனை கடித்துக் குதறிய வெறிநாய்கள்... தோட்டத்தில் துடிதுடித்து இறந்து கிடந்த பரிதாபம்!!
8 வயது சிறுவனை வெறிநாய்கள் கடித்து குதறியதில் துடிதுடித்து பரிதாமபாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்ட சங்கரன் கோவில் அருகே உள்ள ரெங்கசமுத்திரத்தை சேர்ந்த சேதுபதிக்கு திருமணமாகி 3 மகன்கள் மற்றும் பெண் குழந்தை உள்ளது. சேதுபதியின் 3வது மகன் சந்தோஷ் அங்குள்ள ஆர்.சி தொடக்கப்பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்துள்ளான்.
சிறுவன் சந்தோஷ் தினமும் பள்ளி சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்ததும் நண்பர்களுடன் சேர்ந்து விளையாட செல்வது வழக்கம். இதே போல நேற்றும் விளையாட சென்ற சந்தோஷ் இரவு 7 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து சிறுவனின் பெற்றோர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் எங்குமே கிடைக்கவில்லை.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள அந்தோணிச்சாமி என்பவரின் தோட்டத்தில் சிறுவன் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து அதிர்ச்சியடைந்த அவனது பெற்றோர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது சிறுவன் சந்தோஷை வெறிபிடித்த நாய்கள் கடித்து குதறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுவன் உடலை பார்த்து பெற்றோர்கள், உறவினர்கள் கதறி துடித்தனர்.
இது குறித்து அய்யாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சிறுவன் சாவுக்கு காரணம் என்ன? என விசாரித்ததில் சிறுவனை நாய்கள் கடித்து குதறியதில் அவனது உடல் மிகவும் பரிதாபமான நிலையில் துடிதுடித்து இறந்தது தெரியவந்துள்ளது. இதனால் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல் சிறுவனின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பரிதாபமான இந்த கொடூர மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.