அரியலூரில் திருமணமான ஒரே ஆண்டில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை; காவல் துறை விசாரணை
அரியலூர் மாவட்டம் தூத்தூர் கிராமத்தில் திருமணமான ஓராண்டுக்குள் இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மூத்த மகள் கர்ப்பக லட்சுமி. கர்ப்பக லட்சுமிக்கும் அரியலூர் மாவட்டம் அழகிய மணவாளன் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இளவரசன் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கர்ப்பக லட்சுமிக்கு கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கர்ப்பகலெட்சுமி படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குழந்தை நீண்ட நேரம் அழுது கொண்டிருந்த நிலையில், குழந்தையின் அழுகுரலை கேட்ட கர்ப்பக லட்சுமியின் மாமியார் செளந்தர்ய வள்ளி படுக்கை அறைக்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது கர்ப்பக லட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து கர்ப்பகாலட்சுமியின் தந்தை பரமசிவத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அழகிய மணவாளன் கிராமத்திற்கு வந்த பரமசிவம் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தூத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பெண்ணின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.