தன்னுடைய காதலன் தானே, தன்னை கல்யாணம் செய்துகொள்வார் என நம்பி தனிமையில் இருந்துள்ள டீச்சரை ஆபாச வீடியோ காட்டி மிரட்டியதால் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தூர்  அருகே ஆபாச படங்களை வெளியிடுவதாக காதலன் மிரட்டியதால், மனமுடைந்த தனியார் பள்ளி  ஆசிரியை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே  மலையாண்டஅள்ளியை சேர்ந்த பெருமாள் மகள் பிரீத்தா. இவர்  அருகில் உள்ள தனியார் பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த பிரபு என்பவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். 

இவர்களின் காதல் விவகாரம்  வீட்டிற்கு  தெரியவரவே, பெற்றோர் பிரீத்தாவை கடுமையாக கண்டித்துள்ளனர். ஆனாலும், இந்த காதல் ஜோடி  அடிக்கடி தனிமையில் சந்தித்தும், ஒன்றாக பல இடங்களில் சுற்றி வந்துள்ளனர். இந்த உச்சகட்டமாக  தன்னுடைய காதலன் தானே, தன்னை கல்யாணம் செய்துகொள்வார் என நம்பி தனிமையில் இருந்துள்ளார். 

இந்நிலையில்  பிரீத்தா, பிரபு செல்வத்திடம் தன்னை கல்யாணம் செய்து கொள்ளுமாறு  கேட்டுள்ளார். அதற்கு  பிரபுசெல்வம் 10 ஆயிரம் கொடுத்தால் கல்யாணம் செய்து  கொள்வதாக கூறி, ஆரம்பத்தில் பணம் வாங்கியுள்ளார். 

ஆனால் திருமணம் செய்யவில்லை. தொடர்ந்து இதுபோன்று பலமுறை பிரீத்தாவிடம் பணம் பெற்றுள்ளார். கடந்த மாதம்  2ம் தேதி பிரீத்தா, பிரபுவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு  கேட்டபோது, பிரபுசெல்வம் மீண்டும் மீண்டும் பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு பிரீத்தா மறுப்பு தெரிவிக்க, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த பிரபு, பணம் கொடுக்காவிட்டால், நாம்  நெருக்கமாக எடுத்து கொண்ட ஆபாசப் படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன்  என்று மிரட்டல் விடுத்துள்ளார். 

காதலன் கூறியதைக் கேட்டு மனமுடைந்த பிரீத்தா, தன்னுடைய அப்பா அம்மா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவனை நம்பி இருந்தோமே, அவனின் ஆசைக்கு தன்னை அனுபவித்துவிட்டு இப்படி செய்துவிட்டானே என கலங்கி துடித்த ப்ரீத்தா, கடந்த 2ம் தேதி இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி  தீ வைத்துக் கொண்டார். ப்ரீத்தாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர்,  தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

தொடர்ந்து, அவரை மீட்டு, சிகிச்சைக்காக தர்மபுரி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை பிரீத்தா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து,  தற்கொலைக்கு காரணமான காதலன் பிரபுவை வலைவீசித் தேடி வருகின்றனர்.