திருச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை புரோட்டா மாஸ்டர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக புரோட்டா மாஸ்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள இருதயபுரம் பகுதியை சேர்ந்தவர் பவுல்ராஜ் விவசாயி. இவரது 17 வயது மகள் அருகிலுள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். பெற்றோர் வெளியில் சென்றுவிட்டதால் மகள் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பரோட்டா ஜான் ஜோசப் (42) என்பவர் திடீரென வீட்டிற்குள் நுழைந்தார். கதவை சாத்திய அவர் மாணவியின் வாயை பொத்தி குண்டுகட்டாக தூக்கி சென்று கட்டிலில் வைத்து பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், இதுதொடர்பாக வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். 

இதனையடுத்து, வெளியில் சென்றிருந்த பெற்றோர் வீடு திரும்பியதும் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கதறியபடி கூறியுள்ளார். பின்னர், இதுதொடர்பாக லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அத்துமீறி வீட்டிற்குள் நுழைதல், மானபங்கப்படுத்துதல், மிரட்டல் விடுத்தல், காயம் ஏற்படுத்துதல் மற்றும் சிறுமியை பலாத்காரம் செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் கீழ் கைது செய்துள்ளனர். 

கைதான ஜான் ஜோசப்புக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. அங்குள்ள ஓட்டல் ஒன்றில் பரோட்டா கடையில் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். பட்டப்பகலில் இளம்பெண் வீடு புகுந்து பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.