திருப்பூரில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் இளம்பெண் உடல் கிடந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருப்பூர் அவினாசி ரோடு பங்களா பேருந்து  நிறுத்தம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் காந்தி நகர் பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். வெளியூரில் இருந்து வரும் தொழிலாளர்கள் தங்கி வேலை செய்யும் வசதிக்காக பனியன் உரிமையாளர் திருமுருகன்பூண்டி நெசவாளர் காலனியில் உள்ள தோட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி கொடுத்துள்ளார். 

இந்நிலையில், பூட்டியிருந்த 4-வது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தபோது அங்கு அழுகிய நிலையில் இளம்பெண் உடல் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதனையடுத்து போலீசார் நடத்தி விசாரணையில் உயிரிழந்தது புதுக்கோட்டையை சேர்ந்த கயல்விழி என்பது தெரியவந்தது. கயல்விழிக்கும் அதே பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்த விக்னேஷ் (22) என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பின்னர் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் மனைவியை கொலை செய்துவிட்டு விக்னேஷ் வீட்டை பூட்டி விட்டு தப்பி சென்றுவிட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.