திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மகள் திவ்யா (17). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். அதே பகுதி தேவனாங்குளம், படவேடு பகுதியை சேர்ந்தவர் பசுபதி (21). இவர் கடந்த சில மாதங்களாக, மாணவி திவ்யாவிடம் காதலிப்பதாக கூறியுள்ளார். ஆனால் மாணவி, அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், கண்டிதுள்ளார்.

இதையொட்டி தினமும் திவ்யா, சக மாணவிகளுடன் பள்ளிக்கு செல்லும்போது, அவரை பின் தொடர்ந்து தினமும் தொல்லை கொடுத்து வந்தார். இந்நிலையில், இன்று காலை பள்ளிக்கு சக தோழிகளுடன் நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த பசுபதி, தன்னை காதலிக்கும்படி கூறி தகராறு செய்தார். அதற்கு மறுப்பு தெரிவித்து மாணவி சென்றபோது, அவரது கையை பிடித்து இழுத்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடினார்.

உடனே அங்கிருந்த பொதுமக்கள், பசுபதியை சுற்றி வளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதற்கிடையில் படுகாயமடைந்த மாணவியை மீட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.