நாகை மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் பானு(பெயர் மாற்றப்படுள்ளது). இவர் அங்கிருக்கும் ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திட்டக்குடியில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் விவேக் ரவிராஜ் என்பவர் முகநூல் மூலம் அறிமுகமாகி இருக்கிறார். முதலில் நட்பாக பழகிய இவர்கள் நாளடைவில் காதலிக்க தொடங்கியிருக்கிறார்கள்.

விவேக் ரவிராஜ் பல இடங்களுக்கு பானுவை அழைத்து சென்றுள்ளார். அப்போது இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். அந்த நேரத்தில் பானுவிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி உல்லாசம் அனுபவித்திருக்கிறார் விவேக் ரவிராஜ். இதன்காரணமாக கர்ப்பமடைந்த பானுவை, 'ஒரு வருடத்திற்கு பிறகு திருமணம் செய்து கொள்கிறேன். இப்பொது கர்ப்பத்தை கலைத்து விடலாம்' என்று கூறி சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். விவேக் ரவிராஜ் பேச்சை நம்பிய பானுவும் அவர் அழைத்து சென்ற தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துள்ளார்.

இதன்பிறகு பானுவிடம் இருந்து விவேக் ரவிராஜ் கொஞ்சம் கொஞ்சமாக விலக தொடங்கி அவரிடம் பேசுவதை தவிர்த்திருக்கிறார். இதனால் சந்தேகம் அடைந்த பானு, உடனடியாக தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதில் ஆத்திரமடைந்த அந்த காவல் அதிகாரி, நடந்ததை வெளியில் கூறினால் குடும்பத்துடன் கொன்று விடுவேன் என்று மிரட்டி கொச்சை வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். 

இதனால் பயந்து போன பானு, நாகை மற்றும் சென்னையில் இருக்கும் காவல்துறை அலுவலகங்களில் புகார் அளித்துள்ளார். இதில் கோபமடைந்த விவேக் ரவிராஜ், மயிலாடுதுறை அரசியல் வட்டாரங்களில் இருக்கும் முக்கிய புள்ளிகள் மற்றும் ரவுடிகளை கொண்டு புகாரை வாபஸ் பெறச்சொல்லி மிரட்டியிருக்கிறார். மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார்.

இதுதொடர்பான மருத்துவ ஆவணங்கள், ஆடியோ ஆதாரங்கள் மற்றும் வாட்ஸ் ஆப் உரையாடல்கள் போன்றவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் அந்த பெண். ஆனால் விவேக் ரவிராஜ் மீது இதுவரையிலும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள விவேக் ரவிராஜ், அந்த பெண் நடவடிக்கை சரியில்லாதவர் என்றும் ஏற்கனவே இதே போன்ற குற்றச்சாட்டுகளை இன்னொரு நபர் மீது கூறியதாக தெரிவித்துள்ளார். அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பாதாகவும், அந்த பெண்ணின் குற்றச்சாட்டை சட்ட ரீதியாக சந்திக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.