இளம்பெண் கடத்தப்பட்டது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் இளம்பெண்ணையும் வாலிபரையும் தேடி வருகிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி இவரது மகள் நந்தினி பி.பி.ஏ.படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நந்தினி வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால், பயந்துபோன நந்தினியின் தந்தை ரவி தனது மகளை உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டிலும் தேடி பார்த்தார். ஆனால் எங்கும் அவர் இல்லை. இதனால், ரவி கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 

அதில், தனது மகளை நெசல் கிராமத்தை சேர்ந்த அரவிந்த் என்பவர் கடத்தி சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருள்செல்வம் வழக்குபதிவு செய்து நந்தினியை கடத்திசென்ற அரவிந்த்தை தேடி வருகின்றார். 

நந்தினியும், அரவிந்தும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், ஏற்கனவே இந்த தகவல் தெரிந்தது இதனால் 2 கிராமங்களிலும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. போலீசார் விசாரித்ததில், நந்தினியும், அரவிந்தும் காதலித்து வந்ததாகவும் இந்த விஷயம் தெரிந்த நந்தினியின் தந்தை இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நந்தினியை அரவிந்தோடு ஓடிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த காதல் விவகாரத்தால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருக்க மாத்தூர் கிராமத்திலும், நெசல் கிராமத்திலும் சுமார் 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த பகுதி முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.