பிகில் திரைப்படம் வெளியிட தாமதமானதால்  கோபமடைந்த ரசிகர்கள் கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் இருந்த கடைகளின் பேனர்களை அடுத்து உடைத்து அட்டகாசகத்தில் ஈடுபட்டதுடன், போலீஸ் வாகனத்திற்கு அருகில் தீவைத்து எரித்தும் கற்களைவீசியும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்றிரவு கிருஷ்ணகிரியே பதற்றத்தில் மூழ்கியது.

கிருஷ்ணகிரியில் பிகில் படம் பார்க்க வந்த ரசிகர்கள் படம் வெளியிட தாமதமானதால் ஆத்திரம் போலீசாரின் தடுப்பு கம்பிகள், கடைகளின் பேனர்கள் உள்ளிட்டவைகளை சாலையில் போட்டு உடைத்தனர்.  நேற்று இரவு தமிழக அரசு நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்ததையெடுத்து தமிழகம் முழுவதும் இன்று அதிகாலை பிகில் திரைப்படம் வெளியானது. கிருஷ்ணகிரி நகரில் மூன்று திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியிட  இருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 12 மணியளவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த விஜய் ரசிகர்கள் கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியான ரவுண்டானா அருகே குவிய தொடங்கினர். 

ரவுண்டானை பகுதியை சுற்றியே மூன்று திரையரங்குகளும் இருப்பதால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒரே இடத்தில் கூடும் நிலை ஏற்பட்டது. திரைப்படம் 1மணிக்கு வெளியாவதாக தகவல் வந்ததையெடுத்து தொண்டர்கள் திரையரங்குகளில் முண்டியடித்தப்படி திரையரங்குகளுக்குள் புக காத்திருந்தனர். ஆனால் அதிகாலை 3 மணி ஆகியும் திரைப்படம் வெளியாகாததால் ஆத்திரமடைந்த பல ரசிகர்கள் கிருஷ்ணகிரி ரவுண்டான பகுதிக்கு வந்து காவல் கட்டுப்பாட்டு அறை அருகே உள்ள தடுப்பு கம்பிகள், போர்டுகள், கடை விளம்பர பேனர்கள் என அனைத்தையும் சாலையில் போட்டு உடைத்தனர். இரவு நேரம் என்பதால் கற்களை கொண்டும் சாலையில் எரிந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அங்கு அட்டகாசம் செய்து கொண்டிருந்த ரசிகர்களை விரட்டி அடித்தனர். 

மேலும் போலீஸார் வாகனம் அருகிலேயே பட்டாசு வைத்து அலப்பறையிலும் ஈடுபட்டனர். இதனால் கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியான ரவுண்டானா போர்க்களம் போல் காணப்பட்டது. தொடர்ந்து ரவுண்டானாவில் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி உடைத்து நொறுக்கப்பட்டது . பல்வேறு கடைகளின் பேனர்கள் கிழித்து எறியப்பட்டன .தீ வைத்து எரிக்கப்பட்டன .சாலையோர வியாபாரிகள் பிழைப்புக்காக வைத்திருந்த பானைகள் மற்றும்  பொருட்களை உடைத்து சேதப்படுத்தினார்கள் . இதையடுத்து அதிவிரைவு படை போலீசார் அங்கு வந்து விஜய் ரசிகர்களை லேசான தடியடி நடத்திக் கலைத்தனர் . இந்த சம்பவம் தொடர்பாக ஓசூர் மற்றும் சூளகிரி பகுதியை சேர்ந்த 37 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்