விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே இருக்கிறது பெரியாபு சமுத்திரம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி தில்லைநாயகி(45). இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். விவசாயியான மோகனுக்கு பெரியாபு சமுத்திரத்தில் விளைநிலங்கள் இருக்கின்றது. இங்கு மோகனின் மனைவி தில்லைநாயகி தினமும் சென்று தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

சம்பவத்தன்றும் தில்லைநாயகி வயலுக்கு சென்றுள்ளார்.ஆனால் மாலை வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது கணவரும் உறவினர்களும் வயலுக்கு சென்று தேடியுள்ளனர். அங்கு தில்லைநாயகியின் மண்வெட்டியும், செருப்பும் கிடந்துள்ளது. அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த காவலர்கள், தில்லைநாயகியை தீவிரமாக தேடி வந்தனர்.

அப்போது மோகனின் விளைநிலத்துக்கு அருகே இருந்த முட்புதரில் சாக்குமூட்டை ஒன்று கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றி பிரித்து பார்த்தனர். அதில் தில்லைநாயகியின் உடல் உயிரற்ற நிலையில் இருந்தது. அவரது உடலின் பல்வேறு இடங்களில் ரத்த காயங்கள் இருந்தது. அதைக்கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து தில்லைநாயகியின் உடலை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மர்ம நபர்கள் சிலர் தில்லைநாயகியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி புதருக்குள் வீசியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.