மத்திய பிரதேசத்தில் கணவருடன் ஹோட்டலுக்கு சென்ற பெண் அங்கு வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மத்திய பிரதேசத்தில் கணவருடன் ஹோட்டலுக்கு சென்ற பெண் அங்கு வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் டிடி நகரை சேர்ந்த பெண் ஒருவர் ரோஷன்புராவில் உள்ள ஸ்ரீ பேலஸ் ஹோட்டலுக்கு தனது கணவருடன் சென்றுள்ளார். அப்போது, பைக் நிறுத்துவது தொடர்பாக அவருக்கும் அங்கிருந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கணவர் ஹோட்டலுக்குள் இருந்தபோது, அவர்கள் ஆபாசமான கருத்துக்களை கூறி பெண்ணை நோக்கி விசில் அடித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், அந்த இளைஞர்களில் ஒருவரை ஓங்கி கன்னத்தில் அறைந்திருக்கிறார். அதன் பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்திருக்கிறார்கள்.

அப்போது வழியில் பைக்கை வழிமறித்த ஒரு வாலிபர் பேப்பர் கட்டர் மூலம் அவரைத் தாக்கியதோடு பெண்ணின் முகத்தில் பிளேடால் சரமாரியாக கிழித்து விட்டு ஓடியிருக்கிறார். இதில் பலத்த காயமடைந்து அலறித் துடித்த அந்தப் பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது முகத்தில்118 தையல்கள் போடப்பட்டன. இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து சம்பவம் தொடர்பாக இரண்டு குற்றவாளிகளான பாட்ஷா பெக் மற்றும் அஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மூன்றாவது குற்றவாளியைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதையடுத்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அந்த தம்பதியரை நேரில் சந்தித்து மருத்துவ சிகிச்சைக்கு முழு உதவி செய்வதாக உறுதி அளித்திருக்கிறார். மேலும் துணிச்சலாக இளைஞரின் கன்னத்தில் அறைந்து தட்டிக்கேட்ட அந்தப் பெண்ணை பாராட்டியதோடு அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அந்தப் பெண் மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். குற்றவாளிகள் விடுவிக்கப் பட மாட்டார்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.